கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 8 வது சீஸன் கிரிக்கெட் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பில்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ்:
முதலில் பேட்டிங்கை தொடங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. லைகா கோவை கிங்ஸ்யில் அதிகபட்சமாக பாலசுப்பிரமணியன் சச்சின் 53 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய அபிஷேக் 4 ஓவரில் 26 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸ்:
இரண்டாவது இன்னிங்ஸில் 142 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சந்தோஷ் குமார் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் விறுவிறுப்பான ஆட்டத்தை தொடங்கிய சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபரஜீத் 29 பந்துகளில் 38 ரன்களை குவித்து கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜிதேந்திர குமார் மற்றும் பிரதோஷ் பால் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
17வது ஓவரில் ஜிதேந்திர குமார் 14 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் பால் 40 ரன்கள் எடுத்த நிலையில், 19வது ஓவர் முடிவில் ரிட்டயர் டவுட் செய்தார். இறுதி ஓவரை வீசிய முகமது நான்கு ரன்களை மட்டுமே கொடுத்து கோவை கிங்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.
கோவை கிங்ஸ் அணியில் கௌதம் முகமத் ஷாருக்கான் ஜாதவேத் சுப்ரமணியன் தல ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதன் மூலம் டிஎன்பிஎல் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லைகா கோவை கிங்ஸ்யின் அதிகபட்ச ரன்களை குவித்த சச்சினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நாளைய போட்டி:
நாளை சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் ஸ்டேடியத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டமானது மதியம் 3:15 மணிக்கு தொடங்க உள்ளது. நாளை நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி, சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரவு 7:15 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
டிஎன்பிஎல் அணிகள்:
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரானது ஜூலை 5 ஆம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை மொத்தம் 32 போட்டிகள் சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறுகிறது.