ஆன்லைன் மூலம் மோசடி செய்து ஏமாற்றும் செயல்கள் சமீபத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு மோசடி செயல் நடைபெற்றுள்ளது. பெண் ஒருவரை லத்வியா நாட்டின் அமைச்சர் படத்தை பயன்படுத்தி ஒருவர் ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளார். 


இங்கிலாந்தின் மான்சஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஷெரான் புல்மர் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எனினும் இவர் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் ஃபேஸ்புக் மூலம் இவருக்கு ஆண் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவர் அமெரிக்கா ராணுவ வீரர் என்று அறிமுகம் செய்துள்ளார்.




மேலும் படிக்க: இன்ஸ்டா நட்பு! கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து! பெண் வக்கீலை கர்ப்பமாக்கி சிறைக்கு சென்ற 'டான்சர்'




மேலும் அவர் தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கிற்கு படமாக லத்வியா நாட்டின் அமைச்சர் மெர்ஃபியின் படத்தை வைத்துள்ளார். அந்தப் படத்தை பயன்படுத்தி அந்த நபர் இப்பெண்ணிடம் பேசி வந்துள்ளார். அவர் சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளில் இருப்பதாகவும், அவருடைய மனைவி இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு தனிமை மிகவும் வெறுமையாக உள்ளதாகவும் பேச ஒரு நபர் வேண்டும் என்றும் கூறியுள்ளார். 




அதைத் தொடர்ந்து நாளடைவில் இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துள்ளது. அப்போது அந்த நபர் ஷெரானிடம் தான் சிரியாவில் இருந்து வெளியே வர மற்றும் அங்கு அவருக்கு ஏற்பட்ட மருத்துவமனை செலவிற்கு பணம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அவர் கேட்டப்பிறகு ஷெரான் சுமார் 87000 பிரிட்டிஷ் பவுண்ட் அனுப்பியுள்ளார். இவற்றை பிட்காயின் மூலமாக அவர் அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 87 லட்சம் ரூபாயை அவர் அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அந்த நபரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. 


 


இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு இந்த விவகாரம் தொடர்பான உண்மை தெரியவந்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக்கில் லத்வியா நாட்டின் அமைச்சர் படத்தை பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட போலி கணக்குள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதில் சில கணக்குகள் பலரிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்து மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தக் கணக்குகள் தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோன்ற நூதன மோசடியில் பெண் ஒருவர் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: 13 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டனை தாக்கிய ‘லஸ்ஸா’ காய்ச்சல்: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை