பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மகன் கரன் பூஷன் சிங் ஆவார். கரன் பூசனுக்குச் சொந்தமான கார், பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.  


பாஜக வேட்பாளர்:


பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளத்தின் தலைவராக இருந்தபோது, இவர் பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி போராட்டம் நடைபெற்றது. பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


இந்த சர்ச்சையான தருணத்தில் 2024 ஆண்டு மக்களவை தேர்தலில் பிரிஜ் பூஷன் சரண் சிங்-கிற்கு பாஜக கட்சி தலைமை சீட்டு வழங்க மறுத்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் , அவரது மகன் கிரன் பூஷன் சிங்கிற்கு , உத்தரபிரதேசத்தில் உள்ள கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.  




படம்: பிரிஜ் பூஷன் சரண் சிங் மகனும் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்


விபத்து, 


இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தின் கர்னைல்கஞ்ச் பகுதியில், அவருக்குச் சொந்தமான கார் சென்று கொண்டிருந்தபோது பைக் மீது மோதியது. அப்போது, பைக்கில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 17 வயது சிறுவன் ஒருவர் என்றும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.  


இந்த துயர சம்பவத்தையடுத்து, இன்று காலை , அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தெரிவித்ததாவது, என்னுடைய 17 வயது மகனும் மற்றும் மருமகனும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, எதிர்புறத்திலிருந்து வேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.  



விபத்து ஏற்படுத்தியது எஸ்.யூ.வி கார் என்றும் UP32HW1800 என்ற எண்ணைக் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கார், பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கின் குடும்பத்தினரால் நடத்தப்படும், நந்தினி நகர் கல்வி நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


எதிர்கால அரசியலுக்கு சிக்கல்:


இந்நிலையில், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த காரில், பிரிஜ் பூஷன் சரன் சிங் பயணம் செய்தாரா என்று தகவல்கள் எதுவும் தெரியவில்லை. விபத்தில் இறந்த இருவரின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. மேலும், விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஏற்கனவே பாஜக எம்.பி-யாக உள்ள தந்தை பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது மக்களவை வேட்பாளரான அவரது மகன் மீதும் விபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, அரசியல் பாதைக்கு அடுத்தடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


Also Read: DMK Petition: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடியின் தியானத்தை ரத்து செய்யக்கோரி திமுக மனு