Just In





Crime: மனைவியுடன் ஏற்பட்ட தகராறு.. குடும்பத்தினர் 8 பேரை கொலை செய்த இளைஞர்! என்ன நடந்தது?
இந்த சம்பவம் சிந்த்வாரா மாவட்டத்தின் மஹூல்ஜிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடல் கச்சார் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் சொந்த குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை கொன்று விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சிந்த்வாரா மாவட்டத்தின் மஹூல்ஜிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடல் கச்சார் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளி இளைஞருக்கு கடந்த மே 21 ஆம் தேதி விமரிசையாக திருமணம் நடந்துள்ளது. ஆனால் தம்பதியினர் இருவருக்கும் தொடர்ச்சியாக தகராறு இருந்து வந்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அனைவரும் இரவு தூங்க சென்ற நிலையில் முதலில் தனது மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாய், சகோதரி, சகோதரர், மைத்துனர், அண்ணி மற்றும் 3 குழந்தைகள் என அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக கொடூரமான முறையில் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் 10 வயது மட்டும் காயங்களுடன் வீட்டிலிருந்து தப்பித்து ஓடியுள்ளார். நேராக அக்கம் பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த மக்களை கூச்சலிட்டு எழுப்பியதால் இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக பொதுமக்கள் மஹூல்ஜிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷ் காத்ரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்த வீட்டை திறந்து பார்த்தால் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தனர். அனைத்து உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து கொலை செய்த இளைஞரை தேடிய நிலையில் அவர் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஓடும் வாய்க்கால் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காயங்களுடன் தப்பிய குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த8 பேரை இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தங்களுக்கு மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணங்களோ ஏற்பட்டால் கீழ்காணும் எண்ணுக்கு அழைத்து உதவி பெறவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)