சென்னையில் உள்ள கமிஷ்னர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் தனது கையை கிழித்துக் கொண்டு, பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். 


கை, கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்


இன்று காலை சென்னை கமிஷ்னர் அலுவகம் முன்பு வந்த இளைஞர் ஒருவர் தன்னை போலீசார் பழைய வழக்குகள் தொடர்பாக துன்புறுத்துவதாக கூறி சத்தம் போட்டபடி இருந்தார். தொடர்ந்து போலீசார் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த அவர் தான் கொண்டு வந்த பிளேடால் தனது கையை மாறி மாறி அறுத்துக்கொண்டார். ரத்தம் சொட்ட தொடர்ந்து போலீசார் மீது குற்றச்சாட்டுகளை கூறிவந்தவரை போலீஸார் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 


சென்னை பெருநகர கமிஷ்னர் அலுவலகம் முன்பு திடீரென பிளேடால் உடல் முழுதும் கிழித்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் அமர்ந்து போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தியதாலும் பரபரப்பு ஏற்பட்டது. 


விசாரணையில் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரான இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இந்த நிலையில் தொடர்ந்து காவல்துறையினர்  தன்னையும் தனது குடும்பத்தாரையும் தொந்தரவு செய்து வருவதாகவும். கடந்த ஒரு வருடமாக திருந்தி வாழ்ந்தாலும் காவல்துறையினர் பழைய வழக்குகளில் தொடர்ந்து கைது செய்ய முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.