Thiruvarur Chariot Festival 2023: உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆழித் தேரோட்டம்(Thiruvarur Aazhi Ther), ஏப்ரல் 1ம் தேதி நடக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. 


திருவாரூர் ஆழித்தேரோட்டம்:


சைவ சமயங்களில்  பெரிய கோவில் என்றழைக்கப்படுவது திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் கோயிலாகும். சர்வதோஷ பரிகால தலமாக திகழும் தியாகராஜ சுவாமி கோயில் ஏழு கோபுரங்களை கொண்டுள்ளது. மிகப்பெரிய சிவாலயம், கமலாலயம் தீர்த்தமும் உள்ள தலம் இதுவாகும். மேலும் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் தீப வடிவில் தியாகராஜ பெருமானை வணங்குவதாக ஐதீகம்.


இங்கு சிவபெருமானின் பாதங்கள் ஆண்டுக்கு  இரண்டு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிக்கும். மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டிருக்கும். பங்குனி உத்திரம் அன்று இடது பாதமும், திருவாதிரை அன்று வலது பாதமும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும்இந்த கோவிலில் ஆழித்தேர் என்பது உலக பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆழித்தேர் தான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த ஆழித்தேரின் வடத்தை பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது காலம் காலமாக தொடரும் நம்பிக்கை ஆகும்.


மற்ற கோயில்களின் தேர்களைப் போல இல்லாமல் திருவாரூர் ஆழித்தேரானது முற்றிலும் மாறுபட்டது. ஆழித்தேரின் மொத்த எடை 300 டன்னாகும். இந்த தேரின் மேல்பகுதி 5 அடுக்குகளை கொண்டது. மரத்தேர் 30 அடி உயரம், விமான கலசம் வரை வண்ணச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் நிலை வரை 48 அடியும், விமானம் 12 அடியும், தேர் கலசம் 6 அடியும் என மொத்தம் 96 அடி உயரம் கொண்டது.இந்த கோவிலின் தேரின் வடகயிற்றின் நீளம் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் இருக்கும்.


ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவு நிகழ்வாக ஆழித் தேரோட்டம் நடைபெறும். தேர் வீதிகளில் அசைந்தாடி வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். தேர் பீடத்தில் மூங்கில் மற்றும் பனைமரம் கொண்டு கட்டுமான பணிகள் நடக்கும். தேரோட்டத்திற்கு 3 நாட்கள் முன்னதாக கோயிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிளிப்பார். 


தேரின் பின்னால் 2 ஜேசிபி இயந்திரங்கள் தேர் சக்கரங்களை முன்புறம் தள்ளி விட மெதுவாக சக்கரங்கள் சுழன்று நிலையை விட்டு ஆடி அசைந்து புறப்படும். ஆழித்தேரின் நான்கு இரும்புச் சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் இந்தாண்டுக்கான ஆழித்தேரோட்டம்  ஏப்ரல் மாதம் முதல் தேதியில் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.