விழுப்புரம்-மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.


அதில் விழுப்புரம் ரஹீம் லே-அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான, விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலங்களில் பள்ளிகள் இயங்காததாலும், குடும்பத்தின் வறுமையினாலும் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை அச்சிறுவன் செய்துள்ளார்.  



கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த சிறுவன் நடும்போது கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ்  தூக்கி வீசப்பட்டான்.


படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பிற்பகல் 2.25 மணிக்கு  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மாலை 6.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று பிரேத பரிசோதனை முடிந்து சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அன்று  மாலை 6.00 மணிக்கு  சிறுவனின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.


பேனர் வைக்க வேண்டாம் என்ற ஸ்டாலின்


நெடுஞ்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள், கொடி கம்பங்கள் வைப்பதால் ஏற்படும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற்றே பேனர்களையும், கொடி கம்பங்களையும் நடவேண்டும் என்ற விதி கட்டாயப்படுத்தப்பட்டது. 


கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் நடந்த அதிமுக நிர்வாகியின் இல்லத்திருமண விழாவிற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண்ணின் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை அடுத்து அன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு விடுத்த அறிக்கையில் திமுக சார்பில் வரவேற்பு பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.   



ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் நடும் கலாச்சாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. கட்சி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலைகளில் இது போன்ற வரவேற்புக்கு பேனர், கொடி கம்பங்கள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இனியும் அனுமதி வழங்காமல் இருந்தால் இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் இருக்கும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன ?


 



அதில் ’’எனக்கு ஏகாம்பரம் என்பவருடன் திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் உள்ளது. அதில் எனது இளைய மகன் தினேஷ் (வயது 13) தற்சமயம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்சமயம் பள்ளி விடுமுறை என்பதால் இன்று (20.8.21) காலை வெளியே செல்வதாக சென்று இருந்தார். மதியம் சுமார் 2 மணியளவில் எனக்கு வெங்கடேசன் என்பவர் போன் செய்து மகனுக்கு மின்சாரம் தாக்கிவிட்டதாகவும் விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து இருப்பதாகவும், உடனடியாக என்னை வரும்படி கூறினார். நான் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பார்த்த போது அலுவலில் இருந்த மருத்துவர் எனது மகன் தினேஷ் சிகிச்சைபலன் அளிக்காமல் மதியம் சுமார் 2 மணியளவில் இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் விசாரிக்க விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு EB ஆபிஸ் எதிர்புறம் உள்ள சாலை ஓரத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த நபர்களுடன் இரும்பு கம்பியை தனியா தூக்கும்போது சுமார் 13.45 மணிக்கு மேலே சென்ற மின்கம்பியில் பட்டு அதன் மூலம் மின்சாரம் தாக்கி கீழே விழந்தவனை வெங்கடேசன் என்பவர் அங்கு வந்து போக்கு ஆட்டோ மூலம் பழைய அரசு மருத்துமனைக்கு சிகிச்சை கொண்டு சேர்ந்ததாக கூறினார். மின்சாரம் தாக்கி இருந்த என் மகன் மீது எவ்வித சந்தேகம் இல்லை. நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


என்.ஓ.சி., வாங்காமல் கொடி நட்டது அம்பலம்...!


கட்சி சார்பில் கொடி கம்பங்களையோ அல்லது பேனர்களையோ நடுவதற்கு தடையில்லா சான்றிதழுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி அதற்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பேனர்களையோ அல்லது கொடி கம்பங்களையோ நடவேண்டும் என்பது விதி. இந்த நிலையில் திமுக நிர்வாகியின் திருமண நிகழ்ச்சிக்கு பேனர்களையும் கொடி கம்பங்களையும் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் எந்த விண்ணப்பமும் கோரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 


உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு அமைச்சர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்....!


 



பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8ஆம் வகுப்பு படிக்கும்  13 வயது சிறுவன் தினேஷின் குடும்பத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சார்பில்  இழப்பீடாக 1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.