கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை ரயில்வே கேட்டில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் தீர்வுகாண பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டப்பட்டது. அதன் பின்னர் லாலாப்பேட்டை ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் லாலாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடலை கூட ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கேட்டு எடுத்துச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பொது மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூடப்பட்ட ரயில்வே கேட் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பின்பு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.





இதைத்தொடர்ந்து லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில்வே கேட் மீண்டும் மூடப்பட்டது. இதனால் ரயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதையில் பஸ், வேன் போன்ற பெரிய வாகனங்கள் சென்றுவர முடியாமல் உள்ளது. மேலும், சுரங்கப்பாதையில் தண்ணீர் ஊற்றும் இருந்துகொண்டே இருப்பதால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சுரங்கப் பாதையில் சென்று வரும் வகையில் மாற்றி அமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




இந்த நிலையில் லாலாபேட்டை ரயில்வே நிலையத்திற்கு நேற்று முன்தினம் மதியம் தமிழில் எழுதப்பட்ட மர்ம கடிதம் ஒன்று வந்தது. அப்போது பணியில் இருந்த நிலைய அதிகாரிக்கு தமிழ் தெரியாததால் அந்த கடிதத்தை அங்கேயே வைத்து விட்டார். பின்னர் அதிகாரிகள் பணிக்கு வந்தபோது அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் லாலாப்பேட்டை ரயில்வே கேட்டை திறக்காவிட்டால் வெடிகுண்டு வைத்து ரயில் நிலையத்தை தகர்ப்போம் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.




இதை தொடர்ந்து திருச்சி ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு எட்வர்டு, இன்ஸ்பெக்டர் ஜக்குலின், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் லாலாப்பேட்டை மோப்ப நாயுடன் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கேன்டீன் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட பிறகு வெடிகுண்டு கண்டறியும் கருவி கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.




இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்கும் பொருட்டு போலீசார் அதிக அளவில் வரவழைக்கப்பட்டது. கோவை ரயில்வே பாதுகாப்பு படை சிறப்புப் பிரிவினர் நேற்று மாலை மீண்டும் வெடிகுண்டு உள்ளதா என்று பல்வேறு இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். 




இதுபோல வெடிகுண்டு கண்டுபிடிப்பு குழு சப் இன்ஸ்பெக்டர் ராஜா, போலீசார் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிநவீன கருவி மூலம் லாலாபேட்டை ரயில் நிலையம் ,தண்டவாளம், குடிநீர் பகுதி, ரயில்வே கேட் போன்றவை சோதனை செய்தனர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. வெடி குண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் காலை முதல் மாலை வரை லாலாப்பேட்டை ரயில்வே நிலையம் பரபரப்பாகவே காட்சியளித்தது.