நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா காணப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது,. பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் குறைந்த அளவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அங்குள்ள கடைகளுக்கு அதிக வாடகை பிரச்சினை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக வியாபாரிகள் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தி வந்தனர். குறைந்த அளவு செயல்படும் கடைகளால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டமும் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.




இந்த சூழலில் தான்  நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளனர். அதிக சத்தத்துடன் வெடிகுண்டானது வெடித்து உள்ளது,  குறிப்பாக பேருந்து நிலையத்திற்குள் இயங்கும் ஒரு பழ ஜூஸ் கடைக்கு அருகில் நாட்டு வெடிகுண்டானது வீசப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை என்பதாலும்  வெடிகுண்டு வெடித்ததில்  அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் பேருந்து நிலையத்திலும் பெரிய எந்த வித சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,


நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றவர்கள் யார்? எதற்காக இந்த பகுதியில் வீசினர்? இதனை எங்கு தயார் செய்தனர் என்றும், வேறு ஏதேனும் அசம்பாவித  சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பேரூந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு  காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்,




இந்த சூழலில் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் கடை ஒன்றில் வேலை பார்க்கும் கிருஷ்ணன் மற்றும் சுடலை என்ற இரு இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர், நேற்று முன் தினம் பாளையங்கோட்டையில் நடந்த கோவில் திருவிழாவில் வெடிக்காத பட்டாசுகளை எடுத்து சென்று இருவரும் மது போதையில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து விளையாட்டாக வீசி பார்த்துள்ளனர் என காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது, இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,