மழலையர் பள்ளியில் குழந்தையை துன்புறுத்திய விவகாரத்தில் பாஜவை சேர்ந்த பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்தியதாக பாஜக பெண் நிர்வாகியான மீனாட்சி கைதாகியுள்ளார். ராஜாஜி நகரைச் சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தையை கை, கால்களை கட்டிப்போட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

கடந்த 7 மாதங்களாக  மழலையர் பள்ளியில் படித்து வரும் நிலையில் இந்த துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், மழலையர் பள்ளியின்  உரிமையாளரும், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு  செயலாளருமான மீனாட்சி கைதாகியுள்ளார். தனது குழந்தை துன்புறுத்தப்பட்டது  குறித்து கேட்டபோது, பெற்றோரை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனடிப்படையில், மீனாட்சி மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

கைதின் பின்னணி:

Continues below advertisement

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் சரண்யா(33). இவரது 7 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பால் பேச்சு குறைபாடு உள்ள நிலையில்,  வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள மை பாட்டி வீடு என்ற தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அங்கு கடந்த 7 மாதங்களாக சிறுவன் படித்து வரும்  நிலையில் அங்கு பணியாற்ற இன்டர்ன்ஷிப் வந்த கல்லூரி மாணவர்கள் சிறுவன் அங்கு சித்தரவதை செய்யப்படுவதாகவும்,  கை, கால்கள் கட்டப்படுவதாகவும்  பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் சரண்யா உடனே மழலையர் பள்ளி உரிமையாளரும், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி(42) யிடம் சென்று தனது மகனை துன்புறுத்தியது குறித்து கேட்டுள்ளார்.  அப்போது மீனாட்சி அப்படி தான் செய்வோம் என்று தெனாவட்டாக பதிலளித்ததுடன் சரண்யாவை மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சரண்யா இது குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் விசாரணையில் சிறுவனை துன்புறுத்தியதுடன் அதனை கேட்க சென்ற தாய் சரண்யாவை பள்ளி உரிமையாளர் மீனாட்சி மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மீனாட்சி மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

தொடரும் கைது நடவடிக்கை:

கடந்த சில தினங்களாகவே பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுகள், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது மற்றும் அடிதடி என பல குற்றச்சாட்டுகளில் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.