திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன் மகன் வெற்றிவேல் வயது (43). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், வெற்றிவேல் என்பவருக்கும் ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரியதஷினி வயது (17) என்ற மகளும், லிங்கேஸ்வரன் வயது (15), நீதர் வயது (10) என்ற 2 மகன்களுடன் ஆரணி டவுன் தேனருவிநகரில் வசித்து வருகின்றனர். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேல் அவருடைய மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தன்னுடைய அம்மா வீடானஓண்ணுபுரம் கிராமத்தில் ரேவதி தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெற்றிவேல் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மனைவி ரேவதி கணவர் வெற்றிவேலை அழைத்து சென்று சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
மேலும் நேற்று விடியற்காலை திடீரென ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல் மயக்கநிலையில் உள்ளதாக அவருடைய உறவினர்களுக்கு ரேவதி கூறியுள்ளார். உடனடியாக முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேல் ஏற்கனவே இறந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல்துறையினர் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் ரேவதியை காவல்நிலையத்திற்கு வரவைத்தே அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரேவதி சரியான முறையில் பதில் அளிக்க வில்லையாம், சில மணிநேரம் கழித்து காவல்துறையினர் ரேவதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் வயது (41). இவருடன் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக கள்ள தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும் இதனையறிந்த கணவர் வெற்றிவேல் அடிக்கடி தன்னிடம் தகராறு ஈடுபட்டதாகவும், கூலிபடையை ஏவி தனது கணவனை கொலை செய்ய நாங்கள் இருவரும் திட்டமிட்டோம் என்றும், மேலும் கடந்த மார்ச் மாதம் முதலே தன்னுடைய கணவனை கூலி படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜேஷ் வயது (32) என்பவரை அணுகி 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் ரேவதி வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார்.
மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கணவன் தன் குடும்பத்துடன் தனியாக இருப்பதை பயன்படுத்தி ரேவதி தன் கள்ளகாதலன் நாகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை நேற்று விடியற்காலையில் வீட்டிற்கு வரவழைத்து வெற்றிவேலின் கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தியுள்ளார். பின்னர் கணவனின் கால்களை மனைவி ரேவதி பிடித்து கொண்ட போது ராஜேஷ் வெற்றிவேலின் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, ரேவதி இதற்கு உடந்தையாக இருந்த கள்ளகாதலன் நாகராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார்.