உலகில் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோவை முந்தி 23 வயதான கைலியன் எம்பாப்பே 1வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஃபோர்ப்ஸ் பட்டியல்


ஃபோர்ப்ஸ் நிறுவனம் உலகில் அதிகம் சம்பளம் பெறும் கால்பந்து வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வருடா வருடம் வெளியிடப்படும் இந்த பட்டியல் கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் பட்டியல் ஆகும். இதனை வைத்துதான் ரசிகர்கள் வீரர்களின் புகழ் நிலையை அளவீடு செய்கின்றனர். மெஸ்ஸி ரொனால்டோ ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த எட்டு வருடங்களாக இதனை வைத்து சண்டையிட்டு வந்த நிலையில் இரு வீரர்களின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்த வருட ஃபோர்ப்ஸ் தகவல் வெளிவந்துள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவல் படி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் வீரர் கைலியன் எம்பாப்பே உலகின் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரராக உருவெடுத்துள்ளார்.



8 வருடங்களில் முதன்முறை


கடந்த எட்டு ஆண்டுகளில் லியோனல் மெஸ்ஸி அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தவிர வேறு ஒரு வீரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறை. ஃபோர்ப்ஸ் நிறுவனம் 23 வயதான அவர் 2022-23 சீசனில் $128 மில்லியன் சம்பாதிப்பார் என்று மதிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோவை தொடர்ந்து, நெய்மர் ஜூனியர், முகமது சலா மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் அடங்குவர்.


தொடர்புடைய செய்திகள்: நாங்க எதுக்கு நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகணும்..?’ அப்படி தான் இருக்கு பிக்பாஸ் ப்ரொமோ!


மெஸ்ஸி - ரொனால்டோ


அவரைத் தொடர்ந்து லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இந்த சீசனில் முறையே $120 மில்லியன் மற்றும் $100 மில்லியன் சம்பாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்பாப்பே 2022-23 சீசனில் $128 மில்லியன் சம்பாதிப்பது ஃபோர்ப்ஸின் வருடாந்திர தரவரிசையில் ஒரு மிகப்பெரிய சாதனையாகும். இதுவரை இந்த தொகையை ஒரு வருடத்தில் யாரும் பெறுவார்கள் என்று ஃபோர்ப்ஸ் கூறியதில்லை.



புதிய தலைமுறை உருவாகிறதா?


எம்பாப்பே, மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரை தொடர்ந்து, நான்காவது இடத்தில் பிஎஸ்ஜியின் நெய்மர் உள்ளார். அவர் இவ்வருடம் $87 மில்லியன் சம்பாதிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள லிவர்பூல் முன்கள வீரர் மொஹமட் சாலா 53 மில்லியன் டாலர் சம்பாதிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்திய சீசனில் பொருசியா டார்ட்மண்டில் இருந்து கிளப்பில் சேர்ந்த பிறகு தனது மான்செஸ்டர் சிட்டி கேரியரில் ஒரு அற்புதமான தொடக்கத்தை உருவாக்கிய எர்லிங் ஹாலண்ட், $39 மில்லியன் சம்பாதித்து முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார். பட்டியலில் உள்ள 30 வயதுக்குட்பட்ட இரு வீரர்களான பிரெஞ்சு வீரர் எம்பாப்பே மற்றும் நார்வே ஹாலண்ட் ஆகியோரின் எழுச்சி, உலகளாவிய விளையாட்டில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமின்றி மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ என்னும் சூப்பர்ஸ்டார்களின் புகழ் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியையும் அது எழுப்பி உள்ளது.