விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணியம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 640 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைப்பதற்காக ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் வேலை செய்யாமலேயே ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக கூறி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் திடீரென ஒன்றிய அலுவலகத்துக்குள் புகுந்து வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சக அதிகாரிகள் சமாதானம் செய்தனர். பின்னர் இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது, ”தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வருகை பதிவேட்டில் பணித்தள பொறுப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர், பயனாளி ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தனர்.
இந்நிலையில் ABP நாடு இதுகுறித்து சம்பவ இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டது, இதில் திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின..
இச்சம்பவத்தை வெளிக்கொண்டுவந்த பெண்கள் கூறியதாவது :-
நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலையாட்கள் ஒரு சிலர் அவர் அவரது வங்கி கணக்கில் ரூபாய் 3 ஆயிரம், ஐந்தாயிரம் என வரவு வந்துள்ளதாக கலந்து பேசியுள்ளனர். இதனை அறிந்து அங்கிருந்த பெண்கள் ஒரு சிலர் என்னவென்று ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து இணையதளம் மூலம் அவரவர் வங்கிக் கணக்கில் விவரங்களையும் சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக அரசு இணையதளத்தில் எதற்காக பணம் செலுத்தப்பட்டது என ஆய்வு செய்தனர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.. சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு வண்ணியம் கிராமத்தில் வயல்வெளி சாலை என 640 மீட்டர் அளவில் சாலை பணி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் இச்சாலையை போடப்பட்டதாக சுமார் 14 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்தது தெரிய வந்தது.
மேலும் இந்த பணியின் போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்பது வரைமுறை, இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலரை இந்த பணியின் கீழ் பணியமர்த்தப்பட்ட தாக பதிவுசெய்து, அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணியாட்கள் வழங்கப்பட்டதாக ஒதுக்கீடு செய்து அதனையும் கையாடல் செய்தது வெளிவந்தது.
இந்த நிலையில்தான் மேலும் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியானது....
குறிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி இறந்து போன ரேணுகாம்பாள், நாராயணசாமி, மகேஸ்வரி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 3,776 ரூபாய் வரவு வைக்கப்பட்டது வெளிவந்தது. இந்த கையாடல் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் சாலை போடாமலேயே சாலை போடப்பட்டதாக கூறி பணத்தை கையாடல் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் கிராமத்திற்கு வயல்வெளி சாலையை அமைதி தர வேண்டும் என தெரிவித்தனர்.
குறிப்பாக ஊராட்சி ஒன்றிய தேர்தலுக்குப் பின்னர் கையாடல் நடந்திருப்பது மேலும் அதிர்ச்சி உள்ளாகியது. இச்சம்பவம் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய தலைவர் உட்பட இவர்களுக்கு தெரியாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் கையாடல் செய்தது அம்பலமாகியது. பணி நிறைவடைய உள்ள சுழலில், ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியில் இருந்து விடுவித்து இந்த ஊழல் புகார் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.