சரியாகப் பணியாற்றவில்லை எனக்கூறி காவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லாக் அப்பில் அடைத்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது


பீகார் மாநிலத்தில் 2 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட ஐந்து காவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிறையில் அடைத்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான  சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலம், நவடா எஸ்.பி கவுரவ் மங்களா கடந்த 8ஆம் தேதி இரவு ஆய்வு நடத்தியபோது காவலர்கள் பணியில் அதிருப்தியடைந்து இரண்டு உதவு காவல் ஆய்வாளர்கள் உள்பட 5 காவலர்களை லாக் அப்பில் அடைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.


மேலும் அன்றிரவு சுமார் 2 மணி நேரம் வரை அடைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 


இச்சம்பவம் குறித்த வீடியோ முன்னதாக இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இது சித்தரிக்கப்பட்ட வீடியோ என எஸ்பி மங்கலா தெரிவித்துள்ளார்.






இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பீகார் மாநில காவல்துறை சங்கம் வலியுறுத்தி வருகிறது.


இச்சங்கத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் குமார் சிங் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பியை தொடர்பு கொள்ள தாங்கள் முயற்சித்ததாகவும், ஆனால் அவர் பலமுறை அவர் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


"நவாடா கிளையில் சம்பவம் நடந்தவுடன் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் இச்சம்பவம் காவல் துறையினரின் வாட்ஸ்அப் குழுக்களிலும் விவாதிக்கப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் காலனித்துவ ஆதிக்க காலத்தை நினைவூட்டுகின்றன.


இது பீகார் காவல்துறையின் மீது களங்கத்தை விளைவிக்கக்கூடும். இச்சம்பவம் குறித்து முறையான நீதி விசாரணை வேண்டும், சிசிடிவி காட்சிகளையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.


முன்னதாக இச்சம்பவம் குறித்துப் பேசியுள்ள பீகார் தலைமைச் செயலாளர் அமீர் சுபானி, தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் முறையாக நடந்து கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் எந்தவொரு காரணமும் இல்லாமல் முறையற்ற மொழியைப் பயன்படுத்துவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சுபானி  அறிவுறுத்தியுள்ளார்.




மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!


Queen Elizabeth II Death : முதல்வர் ஸ்டாலின் முதல் ஜோ பைடன் வரை.. ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!