Crime : பெங்களூருவில் ஓடும் பைக் டாக்ஸியில் இருந்து இளம்பெண் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பைக் டாக்ஸி


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக வாகன போக்குவரத்தும் கூட எளிதாகி விட்டது. இருந்த இடத்தில் இருந்தே பயண டிக்கெட்டுகள், கார், ஆட்டோ, பைக் என பயணத்திற்கான வாகனங்கள் புக் செய்வது என அனைத்து வசதிகளும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சில நேரங்களில் குற்றச்சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. 


அந்த வகையில் பெங்களூருவில் டாக்ஸி வாகனங்களின் பயன்பாடு அதிகளவில் உள்ள நிலையில், அதில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாலியல் தொந்தரவு


பெங்களூருவைச் சேந்த 28 வயதுடைய பெண் ஒருவர் பணிமுடிந்து இரவு 11 மணிக்கு தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தார். இந்திரா நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல தனியார் நிறுவன பைக் டாக்ஸி யெலஹங்கா என்ற இடத்திற்கு வந்தது. 


பின்பு, ஓடிபி சரிபார்க்கும்போது அந்த பெண்ணின்  மொபைல் போனை வாங்கிய பைக் ஓட்டுநர் தீபக் அந்த பெண்ணை உட்கார சொல்லிவிட்டு திடீரென பைக்கை எடுத்தார். சில நிமிடங்கள் கழித்து அவர் சென்ற பைக் இந்திரா நகரை நோக்கி செல்லாமல் வேறொரு பகுதிக்கு சென்றதை அறிந்ததும் அந்த பெண் தவறான பாதையில் செல்வது குறித்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பினார். 


ஓடும் பைக்கில் இருந்து குதித்த பெண்


இதுமட்டுமின்றி, அந்த பெண்ணை பைக்கில் ஏற்றிக் கொண்டு 60 கி.மீ வேகத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், அந்த பெண்ணுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. உடனே அந்த பெண், பைக் ஓட்டுநரிடன் தனது செல்போனை பறித்தபோது தான் அவர் குடிபோதையில் இருப்பது தெரிந்தது. இதனை அடுத்து, அந்த பெண் தனது நண்பர்களுக்கு செல்போனில் அழைத்து இதுபற்றி தெரிவித்தார்.


இந்நிலையில், ஒரு கட்டத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள அந்த பெண் பைக்கில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, பைக் ஓட்டுநர் தீபக் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்ற காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 


கைது


இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த பைக் ஓட்டுநர் தீபக்கை கைது செய்தனர். 


இதற்கிடையில், பைக் ஓட்டுநர்  டாக்ஸி அப்பில் தவறான பைக் பெயரை பதிவு செய்துள்ளார். அதன்படி, பஜாஜ் பல்சர் வைத்திருக்கும் அந்த நபர் பைக் டாக்ஸி அப்பில் ஹோண்டா ஆக்டிவா வைத்திருப்பதாக பதிவு செய்ததாக விசாரணையில் தெரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.