கொல்கத்தாவில் பெங்காலி நடிகரின் காரை திறந்து அவரது பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளனர். பிரபாத் ராயின் தேசிய விருது வென்ற லத்தி என்னும் 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான சாஹேப் பட்டாச்சார்யா, பபானிபூர் காவல் நிலையம் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு உடற்பயிற்சி செய்ய சென்றார். உள்ளே செல்வதற்கு முன் தனது காரை உடற்பயிற்சி மையத்திற்கு வெளியே விட்டு விட்டு சென்றார். ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து விட்டு, மீண்டும் வெளியே வந்தார். வந்து பார்த்தபோது தனது காரின் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 



உடனே காரின் உள்ளே தேடி பார்த்த போது, அவர் வைத்திருந்த பணப்பை, ஏடிஎம் கார்டுகள் ஆகியன திருடப்பட்டு இருந்தன. சுற்றுமுற்றும் விசாரித்தும், திருட்டு சம்பவம் குறித்து யாரும் எதுவும் கூறவில்லை, எல்லோரும் என்ன நிகழ்ந்தது என்று தெரியாது என்று கூறிவிட்டனர். அதனால் விரைந்து அவர், பபானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து பபானிபூர் போலீசார் காரின் கதவை திறந்து ஏடிஎம் கார்டு மற்றும் பணப்பையை திருடிய மர்ம நபர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடைகளின் சிசிடிவி கேமராக்களின் விடியோ தரவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகிக்கும்படி இதுவரை எதுவும் ஆதாரங்கள் கிடைக்காததால் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் கூறி உள்ளனர். விரைவில் திருடியவர்களை பிடித்துவிடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். முன்னெச்சரிக்கையாக சாஹேப்புடைய ஏடிஎம் கார்டை வங்கியை தொடர்பு கொண்டு முடக்கியுள்ளனர்.



சாஹேப் பட்டாச்சார்யா தனது கலைத்துறை வாழ்க்கையை 2008 இல் பந்தன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகராக தொடங்கினார். பின்னர் 2010 இல் கோரோஸ்தான் சப்தான் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். பின்னர், அவர் இதி மிருணாளினி மற்றும் பீடு போன்ற படங்களில் நடித்து நடிகராக அடையாளம் பெற்றார். ஃபெலுடா சீரிஸ் படங்களில் டாப்ஷீயாக பெரிய திரையில் முத்திரை பதித்தார். சாஹேப் 2010ல் வெளியான கோரோஸ்தான் சப்தான், 2011ல் வெளியான ராயல் பெங்கால் ரஹஸ்யா, மற்றும் 2016ல் வெளியான டபுள் ஃபெலுடா ஆகிய படங்களில் டாப்ஷே கதாபாத்திரத்தில் நடிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சாஹேப் பட்டாச்சார்யாவின் காரில் இருந்த பணம், ஏடிஎம் கார்டுகள் திருடப்பட்ட சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.