செவிலியர்


மேற்கு வங்கத்தின் மேற்கு பர்டுவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக். இவரது மனைவி ரேனு. ஷேக் கேட்டுக்ராம் மாவட்டத்தில்  கொஜல்சா கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருக்றார். அவருக்கு உதவியாக இருந்த வந்த அவரது மனைவி ரேனு,2018ம் ஆண்டு செவிலியர் படிப்பை முடித்தார். படித்து முடித்த கையோடு அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றவும் விண்ணப்பித்துள்ளார். 3ஆண்டுகள்கடந்துவிட்ட நிலையில் கடந்த மாதம் 28ம்தேதி அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி கிடைத்துள்ளது.  ஆனால் மனைவிக்கு அரசுப்பணி கிடைத்த தகவல் கணவர் ஷேக்குக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. 




தலையணையால் அழுத்தி


பணி கிடைத்ததுமே வேலையை விடவேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் ஷேக்.அரசுப்பணி என்றால் வேறு இடத்துக்கு மாறுதல் வரும், அப்படியென்றால் ஊரை விட்டு தனியாக சென்றுவிடுவார் என நினைத்த ஷேக் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஷேக் தன் நண்பர்கள் இருவருடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இரவு 1 மணி அளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரேனுவின் முகத்தில் தலையணையால் அழுத்தி அவரது அலறல் சத்தம் வராமல் செய்துள்ளனர். உடனடியாக ரேனுவின் வலது கையை வெட்டி எடுத்துள்ளனர்.ரத்த வெள்ளத்தில் துடித்த ரேனுவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சிகிச்சையுமளித்துள்ளார் கணவர். விவரம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரேனுவின் குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை ஷேக்கை கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இது குறித்து தெரிவித்துள்ள ரேனுவின் சகோதரன், செவிலியர் ஆகக் கூடாது என்பதற்காகவே கையை வெட்டியுள்ளார். இது கொடுமையான விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளார்




தினம்தினம் சண்டை


இந்த சம்பவம் குறித்து பேசிய ரேனுவின் தந்தை, ''சமூகத்துக்காக செவிலியராக பணியாற்ற வேண்டுமென்பது என் மகளின் ஆசை. அவரது கனவு தற்போது தடையாகிவிட்டது. வேலை கிடைத்தது முதலே அவரது கணவர் அவரை மிரட்டி வந்தார். வேலைக்குச் செல்லக் கூடாது என தினம்தினம் சண்டையிட்டார் என்றார். இந்த விவகாரத்தில் தற்போது சில பெண்கள் அமைப்புகளும் தலையிட்டுள்ளன. வேலைக்குச் செல்லக்கூடாது என்பதற்காகவே மனைவியின் கை வெட்டப்பட்டது மிகவும் கொடுமையானது எனவும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.