காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டியவர் வெட்டும்போது பியர் குடித்ததாகவும், சிகரெட் புகைத்ததாகவும், நெட்ஃப்ளிக்சில் படம் பார்த்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.


ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு


ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், நடுங்கவைக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், 28 வயதான ஆப்தாப் அமின் பூனாவாலா, தனது துணையான ஷ்ரத்தாவை தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள தனது இல்லத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றபிறகு, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்ட 10 மணி நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு இடையில் பிரேக் எடுத்து பீர் குடித்தார் என்றும், சிகரெட் புகைத்தார் என்றும், நெட்ஃபிளிக்ஸில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தார் என்றும், மேலும் Zomatoவில் உணவை ஆர்டர் செய்து உண்டார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.



ஷ்ரத்தா - அஃப்தாப்


அவர் ஆன்லைன் டேட்டிங் மூலம் ஷ்ரத்தா வாக்கரை சந்தித்துள்ளார். பின்னர், மும்பையில் உள்ள அதே கால் சென்டரில் பணிபுரிய ஆரம்பித்த இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது குடும்பத்தினர் இந்த உறவை எதிர்த்தனர், அதனால் இந்த ஜோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மெஹ்ராலிக்கு சென்று ஒன்றாக வாழ்ந்து வந்தது.


பூனாவாலா கடந்த மே மாதம் வால்கரை கழுத்தை நெரித்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டியதாகக் கூறப்படுகிறது, அதை அவர் மெஹ்ராலியில் உள்ள அவரது வீட்டில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்: TN Rain: 21, 22-ஆம் தேதிகளில் மீண்டும் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வடதமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை.. மக்களே உஷார்..


எப்படி வெட்டினார்?


கடந்த மே 18ம் தேதி, திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பூனாவாலா ஷ்ரத்தாவைக் கொன்றுள்ளார். அடுத்த நாள், அவர் ஒரு மரக்கட்டை மற்றும் 300 லிட்டர் குளிர்சாதன பெட்டியை வாங்கியுள்ளார். பூனாவாலா ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர் என்பதாலும், இறைச்சியை வெட்டுவது குறித்து இரண்டு வார பயிற்சி பெற்றிருந்ததாலும், கூரிய கத்திகளை கையாள்வதில் பயிற்சி பெற்றவராக இருந்தார். அதன் மூலம் எளிதாக அவர் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். பூனாவாலா குளிர்சாதன பெட்டியின் டீப் ஃப்ரீசரில் வெட்டிய துண்டுகளை வைத்துள்ளார். மீதமுள்ளவற்றை கீழே உள்ள தட்டில் வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அவர் உறைந்த துண்டுகளை எடுத்து தட்டில் வைத்துவிட்டு, தட்டில் இருந்ததை மாற்றி ஃப்ரீசரில் வைத்து நன்றாக உறைய வைத்துள்ளார். துர்நாற்றத்தை போக்க அவர் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்ததோடு, ரூம் ஃப்ரெஷ்னரையும் பயன்படுத்தியுள்ளார்.



திடுக்கிடும் தகவல்கள்


ஷ்ரத்தாவின் உடலை வெட்டுவதற்கு 10 மணிநேரம் எடுத்ததாகவும், சோர்வடைந்தபோது ஓய்வு எடுத்ததாகவும் பூனாவாலா போலீசாரிடம் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இடையிடையே பீர் குடித்தார் என்றும், சிகரெட் புகைத்தார் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. க்ரைம் திரைப்படங்கள் சீரிஸ்களின் ரசிகரான பூனாவாலா, திருமணம் மற்றும் நிதிப் பிரச்சினைகளில் ஏற்பட்ட சண்டையின் பின்னர் ஷ்ரத்தா வாக்கரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.


மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டுவதற்கான யோசனை அமெரிக்க க்ரைம் டிவி தொடரான ​​“டெக்ஸ்டர்” மூலம் ஈர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார். வெட்டிய துண்டுகளை வெளியில் எடுத்து பாலித்தீன் பைகளில் அடைத்து பேக்கில் வைத்து காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


”அவர் அதிகாலை 2 மணிக்கு காட்டிற்குச் சென்று இரண்டு மணிநேரம் கழித்துத் திரும்புகிறார். அவர் சுமார் 20 நாட்களுக்கு இதைத் திரும்பத் திரும்பச் செய்துள்ளார்" என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.


முன்னதாக, தில்லி நீதிமன்றம் பூனாவாலாவை மேலும் ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க நகர காவல்துறைக்கு அனுமதி அளித்தது, மற்றொரு நீதிபதி நார்கோ நடைமுறைக்கு உட்படுத்த ஒப்புக்கொண்ட பிறகு அவரது போதைப்பொருள் பகுப்பாய்வு சோதனைக்கு அனுமதி அளித்தார்.