பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற செய்திகள் நம்மை தொடர்ந்து அச்சம் அடைய செய்து வருகிறது. அப்படி ஒரு சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் சிறுமியின் பெற்றோர் சமாதானத்துக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெற்றோரின் செயல் காரணமாக அந்தச் சிறுமி தற்கொலை செய்து கொண்டது  துயர சம்பவமாக அமைந்துள்ளது. 


உத்தரபிரதேச மாநிலத்தின் பெய்ரேலி பகுதியில் ஒரு குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. அந்தக் குடும்பத்தில் 14 வயது சிறுமி ஒருவர் இருந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடைய வீட்டிற்கு அருகே இருந்த 17 வயது நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அச்சிறுமி தன்னுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல்துறையினருக்கு புகார் அளிப்பதற்கு பதிலாக பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் சமாதானம் பேசியுள்ளனர். 


அதாவது அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்க வேண்டாம் என்பது தொடர்பாக இரு குடும்பத்தினரும் பேசி வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அச்சிறுமி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய தற்கொலைக்கு பிறகு காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த நபரின் வயது தொடர்பான ஆவணங்களையும் திரட்டி வருகின்றனர். தற்போது அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த 17 வயது நபரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் சகோதாரர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “மே 22ஆம் தேதி முதல் என்னுடைய சகோதரி கடும் மன உளைச்சலில் இருந்தார். வீட்டில் நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று என்னுடைய சகோதரி தெரிவித்து வந்தார். எனினும் அதற்கு மாறாக எங்களுடைய பெற்றோர்கள் சமாதானம் செய்து கொள்ள போவதை அறிந்தவுடன் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண