திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மான்பூண்டி ஆற்றில் முட்புதரின் நடுவில் குழந்தையின் அழுகுரல் சப்தம் வந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து அங்கு சென்று பார்த்த போது பச்சிளம் பெண் குழந்தை முட்புதரில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த குழந்தையை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் சிறிது நேரத்தில் உடலில் காயங்களோடு ரத்தத்துடன் அங்குள்ள கோவில் அருகே பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தான் முட்புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய் என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண் மணப்பாறை அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த சசிகலா(வயது 38) என்பதும்,அவருக்கு ஏற்கனவே 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இவரது கணவன் இறந்து விட்ட நிலையில் திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவர் முட்புதரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டு அருகில் உள்ள கோவில் வளாகத்திற்கு சென்று படுத்துக்கொண்டதும் தெரியவந்தது. தாய்-சேய் இருவருக்கும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உடலில் தொப்புள் கொடியோடு ஈரம் கூட காயாமல் குழந்தை இருக்க ரத்தத்துடன் தாய் படுத்திருக்க யாருமின்றி முட்புதரில் நடந்த பிரசவ நிகழ்வு அங்கிருந்த அனைவரின் நெஞ்சங்களையும் உருக்குலையச் செய்திருக்கிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்