இந்தியா – வங்காளதேசம் எல்லையில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதும், வங்காளதேசத்தில் இருந்து பலரும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறுவதும் நடைபெறும் காரணத்தால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்து சென்ற வங்காளதேச பதின்ம வயது சிறுவன் ஒருவனை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர் இந்தியாவிற்குள் நுழைந்த காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.




ஏமன் ஹொசைன் என்ற அந்த வங்காளதேச வாலிபர் இந்தியா- வங்காளதேச எல்லையில் உள்ள ஷால்டா ஆற்றின் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த ஆறு இரு நாட்டிற்கும் இடையேயான சர்வதேச எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏமன் ஹொசைன் இந்த ஆற்றில் நீந்தி இந்திய எல்லையான திரிபுரா மாநிலத்தில் உள்ள சிபாஹிஜாலா மாவட்டத்திற்குள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்தியாவிற்குள் நுழையும் இவர் தனக்குப் பிடித்த சாக்லேட்களை வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளார்.


ஆற்றின் வழியே நீந்தி இந்திய- வங்காளதேச எல்லையில் உள்ள தடுப்பில் உள்ள சிறு துளை வழியாக சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள கலம்சௌரா கிராமத்திற்கு வந்து, தனக்குப் பிடித்த சாக்லேட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தான் வந்த பாதையிலே வங்காளதேசம் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி எல்லைப் பாதுகாப்பு படையினர் ஏமன் ஹொசைனை பிடித்து, அங்கே உள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உள்ளூர் போலீசார் அந்த சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில், அவனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




அதிகாரிகள் கூறும்போது, விசாரணையில் இந்த பதின்ம வயது சிறுவன் வங்காளதேசத்தில் உள்ள கோமிலா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றும், சாக்லேட்டுகள் வாங்குவதற்காகவே இந்தியா வந்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது. இவனுடன் இதுவரை 100 வங்காளதேசத்தினரை இதுபோன்று கண்டுபிடித்துள்ளோம். ஆனால், இந்த சிறுவன் எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனாலும், இந்தியாவிற்குள் முறையான ஆவணங்கள் இல்லாமல் உள்ளே நுழைந்ததற்காக இந்த சிறுவனை கைது செய்துள்ளோம் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண