உத்திரப்பிரதேசத்தில் இரு சிறுவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தில் தான் இந்த குற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சாய்பாபா காலனியில் சலூன் கடை ஒன்றை சஜித் கான் என்ற நபர் நடத்தி வருகிறார். இவருக்கு கடை அருகே மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் வினோத் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நட்பில் இருந்த வினோத்திடம் சஜித் ரூ.5 ஆயிரம் பணம் கேட்க, இவர் கொடுக்க மறுத்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த சஜித் கான் வினோத் வீட்டுக்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரின் மகன்களாக ஆயூஷ் (11), ஆஹான்(7) மற்றும் பியூஷ் ஆகிய 3 பேரையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆயுஷ் மற்றும் ஆஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பியூஷ் இலேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சிறுவர்கள் இரட்டைக் கொலை வழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தை அதிர வைத்தது. 


உயிரிழந்த குழந்தைகளை மொத்தம் 23 முறை சஜித் தாக்கியிப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதனிடையே இந்த வழக்கில் போலீசார் கைது செய்யப்பட்ட சஜித் கான் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்த பின் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த சிறுவர்கள் கொலை சம்பவத்தில் சஜித்தின் சகோதரன் ஜாவேத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தகவல் கொடுத்தால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜாவேத் டெல்லியில் இருந்தார். சஜித் என்கவுண்டர் செய்யப்பட்டதால் பயந்துபோன அவர் போலீசில் சரணடைய முடிவு செய்தார். அதன்படி டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வந்த ஜாவேத்தை பேருந்து நிலையத்தில் வைத்து பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரிடம் தான் குழந்தைகள் கொன்ற விஷயத்தில் சிறிதும் தொடர்பில்லாதவன் என ஜாவேத் கூறியதாக கூறப்படுகிறது. இருந்தும் அவரிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 




மேலும் படிக்க: Crime: வெளிநாடு செல்ல கடத்தல் நாடகம்.. அப்பாவிடம் ரூ.30 லட்சம் பறிக்க முயன்ற மகள்!