மத்தியப் பிரதேசத்தில் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு கடத்தல் நாடகம் ஆடிய இளம்பெண் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆசை 60 நாட்கள் என சொல்வார்கள். அந்த மாதிரி ஆர்வப்பட்டு எதாவது செய்ய நினைக்கையில் அது மிகப்பெரிய பிரச்சினையை உண்டு பண்ணிவிடும். அதேசமயம் குறுக்கு வழியில் நினைத்ததை அடைய முயற்சிப்பது ஆபத்தில் தான் போய் முடிவடையும். அப்படி ஒரு சம்பவம் தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 


கடந்த மார்ச் 18 ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த காவ்யா தாகத் என்ற மாணவி காணாமல் போனார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி காணாமல் போனதால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிய பின்னர் போலீசில் புகாரளித்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் அந்த மாணவியின் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு எந்தவித பிரச்சனையும், மிரட்டலும் இல்லை என முதற்கட்ட தகவல் கிடைத்தது. 


இதனிடையே காவ்யாவின் தந்தையான ரகுவீர் தாகத்துக்கு செல்போனில் ரூ.30 லட்சம் பணம் கேட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் மாணவி கை, கால்கள் கட்டப்பட்ட புகைப்படங்களும் வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாரிடம் காட்டியுள்ளார். உடனடியாக மாணவி காணாமல்போன அன்று ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காவ்யா ஜெய்ப்பூரில் உள்ள துர்காபுரா ரயில் நிலையத்தில் இரு இளைஞர்களுடன் செல்வது தெரியவந்தது. 


இதனைத் தொடர்ந்து மாணவியைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் போலீசார் தெரிவித்தனர். இதன்மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் மாணவி காவ்யா இருப்பிடம் கண்டறியப்பட்டு அவர் மீட்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 


ராஜஸ்தானில் மீட்கப்பட்ட காவ்யா, வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதற்காக தந்தையிடம் ரூ.30 லட்சம் பறிப்பதற்காக அதைச் செய்துள்ளார். இதற்காக 2 இளைஞர்கள் உதவியுள்ளனர் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியை எச்சரித்து குடும்பத்தினருடன் அனுப்பிய போலீசார், தப்பிய அந்த இரு இளைஞர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 




மேலும் படிக்க: வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்! செருப்பு மாலை போட்ட கும்பல் - ம.பியில் அதிர்ச்சி!