செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் நெல் வியாபாரம் செய்துவந்தார். இவருடைய மகன் ஏகாம்பரம் இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வழக்கம்போல் தன் வேலையை முடித்துவிட்டு  நேற்று இரவு தனது ஆட்டோவை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார்.

 



அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் அந்த இடத்திற்கு வந்து ஆட்டோவின் லாக்கரை உடைத்து விட்டு, ஆட்டோவை மெதுவாகத் தள்ளிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் கிராமத்தில் ஆட்டோவை நான்கு நபர்கள் திருடி தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்த போதுதான், அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் ஏன் ஆட்டோவை தள்ளி செல்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோ முதலாளிதான் ஆட்டோ ரிப்பேர் ஆகிவிட்டது, என ரிப்பேர் செய்வதற்காக எங்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர். ஆட்டோ ஓனர் பெயர் சொல்லுங்கள் என அந்த  நபர் கேட்டவுடன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை கூப்பிட்டு உள்ளார்.

 



இதனால் ஆத்திரமடைந்த 4 மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி அங்கிருந்த பொதுமக்களை மிரட்டி உள்ளனர். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஏகாம்பரமும் வந்துள்ளார். மேலும் கையில் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை பயன்படுத்தி பொதுமக்களை தாக்கி உள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் ஆட்டோவை திருடிச் சென்ற நபர்களை தாக்கியது மட்டுமில்லாமல், தப்பி ஓடாமல் இருக்க 4 நபர்களையும் கட்டி வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் சென்னை சேர்ந்தவர்கள்  மற்றொருவர் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் கண்டுபிடித்தனர்.

 



இதனையடுத்து உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூன்று நபர்களையும் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த பிரகாஷ், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சசிகுமார் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.