சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த சில வருடங்களாகவே விலங்குகள் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும் உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அதில் சிறிய வகை கூடைக்குள் 9 அரிய வகை அணில் குட்டிகள் இருந்தன. இதை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வெளிநாட்டில் இருந்து வளர்ப்பதற்காக அணில் குட்டிகள் வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்குப் பாதுகாப்பு துறைக்கும் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
ஆனால் அந்த இளைஞரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் அணில் குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் நம் நாட்டு விலங்குகளுக்கு பரவும் ஆபத்து இருப்பதால், இதை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது சரியாக இருக்கும் என்று மத்திய வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினா். இதையடுத்து திருப்பி அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வன விலங்குகளை கடத்தி வந்தவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக பல கோடி மதிப்புள்ள கடத்தப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்த நிலையில் உயிருடன் உள்ள அணியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நேற்று தாய்லாந்து நாட்டில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை வெள்ளை முள்ளம் பன்றி மற்றும் டாமரின் குரங்கு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்