தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயரிட்டு, வருகின்ற அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவித்தார். இதற்காக இந்த ஆண்டில் ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை அளிக்க 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே தலைஞாயிறு கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் என்பவர் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது தலைஞாயிறு கிராமம் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் என்பவர் தங்களது வீட்டிற்கு வந்து கணக்கெடுக்க வரவில்லை எனக் கூறி கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யாத வீடுகளுக்கு மட்டும் சென்று கணக்கெடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இது குறித்து வாக்குவாதம் நடைபெற்று வந்தபோது, திடீரென முருகனின் மகன் தீனதயாளன் ஓடி வந்து கிராம நிர்வாக அலுவலரை தாக்கி உள்ளனர்.
மேலும், உனது வீட்டை அடித்து நொறுக்கி விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த உதயகுமார் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து மணல்மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முருகன் மகன் தீனதயாளனை கைது செய்து, தப்பி ஓடிய முருகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக ஈடுப்பட்டுள்ள பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.