டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிப்பது தொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடிய கோப்புகளை தமிழக அரசு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி உள்ளது. 


டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தார். 
 
 அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது எப்படி?


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல டிஎன்பிஎஸ்சியில் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது. 


தமிழக அரசின் முடிவு


1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக அதாவது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர். சைலேந்திர பாபு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான தமிழக அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் தகவல் கசிந்தது. 


இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. சம்பந்தப்பட்ட கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிய நிலையில், போதிய விளக்கங்கள் என்றுகூறி ஆளுநர் கோப்பைத் திருப்பி அனுப்பினார். 


ஆளுநரின் கேள்விகள்


அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்தும் ஆளுநர் விளக்கம் கேட்டு இருந்தார். அதேபோல தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? எனவும் அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியானது. டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் ஓய்வுக்கான உச்ச வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 62 வயது என்ற சூழலில், 61 வயது நபரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஆளுநர் கேட்டதாகவும் தகவல் வெளியானது.


இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்டுள்ள கேள்விகளுக்கு, விரைவில் தமிழக அரசு சார்பில் பதில் கொடுக்கப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 


இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிப்பது தொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடிய கோப்புகளை தமிழக அரசு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமித்ததற்கான காரணம், அவரின் தகுதிகள் குறித்த விளக்கம் முழுமையாக கோப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.