திருவாரூர் அருகே நடந்த ஏடிஎம் கொள்ளை முயற்சியை தடுத்தவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருவாரூர் மாவட்டம் கூடூர் பகுதியில் தமிழரசன் என்பவருக்குச் சொந்தமான லட்சுமி காம்ப்ளக்ஸ் என்கிற தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. காம்ப்ளக்ஸுக்கு பின்புறம் தமிழரசன் தனது வீட்டில் வசித்து வந்தார். அந்த தனியார் வணிக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதியன்று நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏடிஎம் மையத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மூன்று இளைஞர்கள் அங்கிருந்து தப்பிக்க புள்ளமங்கலம் பகுதியை சேர்ந்த 19 வயதான மதன் என்கிற இளைஞன் மட்டும் சிக்கிக் கொண்டான். அவனை காப்பாற்ற தப்பிச் சென்ற மற்றொரு கூட்டாளியான 20 வயதான பிரதாப் தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தபோது தனியார் வணிக வளாக உரிமையாளர் தமிழரசன் அவனை தடுத்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த திருப்புளியால் தமிழரசனை குத்திவிட்டு அங்கிருந்து பிரதாப் தப்பிச் சென்றுவிட்டான். இதில் சம்பவ இடத்திலேயே தமிழரசன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் 12 மணி நேரத்திற்குள் புள்ளமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன், விஜய், பிரதாப், ஆகாஷ் ஆகிய 4 குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க வந்த இளைஞர்கள் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வெல்டிங் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர் அதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏடிஎம் மையத்திற்கு எதிரே உள்ள வெல்டிங் பட்டறையில் இருந்து எரிவாயு சிலிண்டர் காணாமல் போயுள்ளதாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவன் என பெயர்பெற்ற திருவாரூர் சீராதோப்பு முருகனிடம் நான்கு இளைஞர்களும் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நான்கு குற்றவாளிகளும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் வெளி வராதவாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நான்கு குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.