பொய் வழக்கு பதிந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது
பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை விசாரணை என்ற பெயரில் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் கடுமையாகத் தடியால் அடித்துத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கவிருந்த பேராசிரியர் கல்விமணி மற்றும் எழுத்தாளர் இரா.முருகப்பன் ஆகியோரை உதவி ஆய்வாளர் விவேகானந்தன் கைது செய்துள்ளார். இது தொடர்பாக பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், ”விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்பூர் கிராமத்திலுள்ள பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை 14.05.2019 அன்று பகல் 1.00 மணியளவில் மயிலம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில், அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் கடுமையாகத் தடியால் அடித்துத் தாக்கினார்.
காவல் நிலைய சித்திரவதையில் பாதிக்கப்பட்ட மோகன் அன்று இரவே திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். மேற்படி மோகன் காவல்துறையினரால் பாதிக்கப்பட்டது தொடர்பாக புகாரினைத் தயாரித்துக்கொண்டு, மறுநாள் 15.05.2019 அன்று காலை 8.00 மணியளவில் பேராசிரியர் கல்யாணி, இரா.முருகப்பன் இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, புகார் மனுக்களில் மோகனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு 8.30 மணிக்கு மருத்துவமனையை விட்டு வெளியில் வந்துள்ளனர்.
அப்பொழுது மருத்துவமனை வாசலிலேயே பேராசிரியர் கல்யாணி, முருகப்பன் இருவரையும் மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் சீருடை அணியாத காவலர்களான வெங்கடேசன், அறிவுநிதி ஆகிய மூவரும் மனிதாபிமானமற்ற முறையில், மூர்க்கத்தனமான முறையில் கைது செய்து, அவர்கள் எடுத்து வந்திருந்த தனியார் காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு இழுத்துச் சென்றனர்.
காவல் நிலைய சித்திரவதையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மோகனுக்கு நீதி கிடைத்திட புகார் மனு எழுத உதவிய பேராசிரியர் கல்விமணி, எழுத்தாளர் இரா.முருகப்பன் இருவரையும் மூர்க்கத்தனமாக கைது செய்து, பொய் வழக்குப் பதிவு செய்த மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் உள்ளிட்டோர் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தனர்.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதியரசர் துரை.ஜெயச்சந்திரன் அவர்கள், தொடர் விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்த நிலையில் பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் இரா.முருகப்பன் இருவரையும் மூர்க்கத்தனமாக கைது செய்து, பொய் வழக்குப் பதிவு செய்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அப்போதைய மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தனுக்கு ரூ. 50,000/- அபராதம் விதித்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்குள் பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் இரா.முருகப்பன் ஆகிய இருவருக்கும் தலா ரூ 25,000/- ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், இத்தொகையினை பின்னர் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது துறை ரீதியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல் நிலைய சித்திரவதைகளும், காவல் நிலைய மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில், காவல் அத்துமீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உதிரவிட்ட மனித உரிமை ஆணையத்திற்கும், உறுப்பினர் திருமிகு துரை.ஜெயசந்திரன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.