தன்னுடைய அடுத்த திரைப்படமான `பத்து தல’ படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு. இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். `பத்து தல’ திரைப்படத்திற்காக தனது லுக்கை மீண்டும் மாற்றியுள்ளார் நடிகர் சிம்பு. கடந்த 2017ஆம் ஆண்டு, கன்னட மொழியில் வெளியான `மஃப்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது `பத்து தல’. அறிமுக இயக்குநர் நாதனின் உருவாக்கத்தில் நியோ நாய்ர் பாணியிலான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஜெயண்ணா கம்பைன்ஸ் தயாரிப்பில் வெளியாகிய மூலத் திரைப்படமான `மஃப்டி’ பெரும் வரவேற்பைப் பெற்றது. நிழலுக டான் ஒருவரைத் தேடி, கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியின் கதையாக இது உருவாக்கப்பட்டது. ஸ்ரீ முரளி, சிவா ராஜ்குமார் ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம், வசூல் ரீதியாக பெரு வெற்றி பெற்றதோடு, சிவா ராஜ்குமாரின் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக அமைந்துள்ளது.
தனது திரைப்பயணத்தைத் தன் தந்தை டி.ராஜேந்திரின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தொடங்கினார் நடிகர் சிம்பு. கடந்த 2002ஆம் ஆண்டு, `காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து அறிமுகமானார் சிம்பு. தன் தந்தை டி.ராஜேந்தரின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் உருவான `காதல் அழிவதில்லை’ சுமார் 100 நாள்கள் வரை திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடியது.