அசாம் மாநிலம் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் இரண்டு சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் இது கொலையாகவும் இருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீசார் பல கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதலில் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதை தற்கொலை போல ஜோடிக்க நினைத்த கொலையாளிகள் அவர்களை மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இது குறித்து பேசிய கோக்ராஜ்கர் எஸ்பி ப்ரதீக் விஜய்குமார், நாங்கள் 7 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களில் 3 பேர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள். தீவிர விசாரணைக்கு பின் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு 72 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
சிறுமிகள் கொலையில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டது குறித்து அசாம் மாநில முதல்வரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிகள் கொலை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் பிடிப்பட்டது நிம்மதியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் பதிவுக்கு ரிப்ளை செய்துள்ள பலரும் அரசின் துரித நடவடிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, சிறுமிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட விவகாரம் அசாமில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமியின் இல்லத்துக்கே நேரில் சென்ற அசாம் முதலமைச்சர் ஹிமாண்டா பிஸ்வா உரிய விசாரணை நடத்தப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.