காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனால் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எடிஎஸ்பியாக உள்ள வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனையத்து கடந்த ஒரு வாரமாக மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளை கைது செய்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குணாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக, சென்னை ஆயுதப்படையை சேர்ந்த வெங்கடேசன் ( 38) என்பவரை கடந்த சில நாட்களாக காவல்துறையினர் தேடிவந்தனர். நேற்று முன்தினம் வெங்கடேசனை சுங்காசத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் ரவுடிக்கு ஆதரவாக இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரபல ரவுடி குணா சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சுங்குவார்சத்திரம் அருகே, கீரநல்லுார் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கொலை மிரட்டல் விடுத்து நிலம் அபகரிப்பு செய்ய முயன்ற வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி குணா கைதாகினார். அதன்பின், ஜாமினில் வந்தவர், சில நாட்களாக தலைமறைவாக உள்ளார். குணாவின் மனைவி தற்போது சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பதவியையும் கைப்பற்ற குணாவின் மனைவி முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரவுடிகள் உள்ளிட்டவர்களால் தொடர்ந்து அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக பணம் பெற்று வருவது வாடிக்கையாகி உள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு இந்த குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ரவுடிகளை தவிர்த்து, சென்னையிலிருந்தும் ரவுடிகள் இந்த இடத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அரசு உடனடியாக ரவுடிகளை களைய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களில் கோரிக்கையாக உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்