திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கிகளில் தானியம் ஈட்டு கடன் விவசாயிகளுக்கு  வழங்கப்பட்டு வருகின்றது . இதில் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சார்ந்த விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களில் விளைந்த நெல் போன்றவற்றை அடமானம் வைத்து தனியார் வங்கியில் தானிய ஈட்டு கடன் பெற்று வந்துள்ளனர்.


விவசாயிகள் அடமானம் வைத்த தானியங்களை பாதுகாக்க வங்கிகள் மூலம் ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனத்தின் மூலம் குடோனில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் அந்த ஏஜென்சி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் முகவர்கள் மூலம் குடோனில் உள்ள நெல் போன்றவை அடமானமாக வைக்கப்பட்ட தானியங்களை யாருக்கும் தெரியாமல் சிறிது ,சிறிதாக விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 


 




 


மேலும் வங்கிகளில் கடன் வாங்கிய சில விவசாயிகள் கடனுக்கான தவணை கட்டாமல் இருந்து வந்துள்ளனர் . இதனால் சந்தேகம் அடைந்த தனியார் வங்கி அதிகாரிகள்   தானியங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தனியார் ஏஜென்சியின் குடோனில் சோதனை செய்தனர் . அப்போது விவசாயிகளின் தானியங்கள் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் முகவர்கள் மூலம் தானியங்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.



இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் வங்கியாளர்கள் விசாரணை செய்ய திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் சுமார் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்தது. மேலும் ஆரணி தாலுகா நெசல் அஞ்சல் புதுப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வியாபாரியான செந்தில்குமார் வயது (40) என்பவர் நெல் மற்றும் அரிசி மூட்டைகளை தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து சுமார் ரூ.2 கோடியே 30 லட்சம் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். 


 




 


இதுகுறித்து அவர் மீது குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தனியார் வங்கியாளர்கள் புகார் செய்தனர். இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகர பேருந்து நிலையத்தில் நின்றிருந்த செந்தில்குமாரை  போலீசார் கைது செய்தனர். அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற          https://bit.ly/2TMX27X