நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே தெற்கு வெட்டியபந்தி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதி ஆச்சிமடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. மாரியப்பன் பின்னால் வந்தவர்களுக்கு வழிவிடாமல் சென்றதாகவும், அவரை நிறுத்தி பிரச்சினை செய்ததோடு ஊர் மற்றும் பெயரை விசாரித்துள்ளனர். ஊர் பெயரை சொன்னவுடன் மர்ம கும்பல் பள்ளப்பயலா நீ ? எதற்கு இங்கே வந்தாய் ? என்று கூறி கீழே கிடந்த கல்லால் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. அக்கும்பல் தாக்கியதில் மாரியப்பனின் தலை, வாய் மற்றும் உடம்பில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த மாரியப்பன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் சிவந்திப்பட்டி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து மாரியப்பன் கூறும் பொழுது, இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்குவதற்குள் வழிமறித்து பிரச்சினை செய்தனர். பின்னர் ஊர் பெயர் கேட்டனர். கூறியதும் கீழே இருந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கினர். ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை, அவர்களை பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதி ரீதியான கொலைகள், மோதல்கள் நடைபெற்று வரும் சூழலில் தனியார் நிறுவன ஊழியர் மீண்டும் சாதி பிரச்சினையால் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடப்பட்டது.
நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் மாரியப்பன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 30 ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற போது அங்கிருந்து கஞ்சா, போதை கும்பலிடம் சிக்கிக் கொண்டதில் அந்த கும்பல் மனோஜ்குமார் மாரியப்பன் இருவரையும் சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் சாதி பெயரை சொல்லி திட்டியதுடன் ஆயுதங்களால் தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் இருவர் மீதும் அப்போதை கும்பல் சிறுநீர் கழித்ததுடன் அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சாதி ரீதியான தாக்குதல் சம்பவம் ஓய்வதற்குள் நெல்லை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவமாக தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை மர்ம கும்பல் சாதி பெயரை சொல்லி கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.