ஆந்திராவில் கொலை சம்பவம் ஒன்றில் கிராம பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுதொடர்பாக பாலகொண்டா டி.எஸ்.பி எம்.ஸ்ரவாணி கூறியுள்ள தகவலில், ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கடைநிலை கிராமமான ரெகுலகுடாவில் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது ​​அதே கிராமத்தைச் சேர்ந்த சவர் கயா (வயது 60) என்பவரின் மகள் பத்மாவை மனவளர்ச்சி குன்றிய நபரான சவர் சிங்கண்ணா (33) என்பவர் கட்டையால் தாக்கியுள்ளார்.


இதைக் கண்டு அதிர்ச்சியான சவர் கயா சிங்கண்ணாவை கீழே தள்ளியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கண்ணா கயாவை கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாள் கயாவின் மகன்கள் சிங்கண்ணாவின் கை, கால்களை கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிங்கண்ணா குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


உடனடியாக இந்த சம்பவம் கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு செய்யப்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்து பழங்குடியின தலைவர்கள் விசாரணை நடத்தினர். இதில் தங்களது தந்தை இறந்துவிட்டதால் சிங்கண்ணாவும் இறக்க வேண்டும் என்று கயாவின் மகன்கள் கூறினர்.இல்லையென்றால் அவரின் குடும்பத்தில் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். 


பஞ்சாயத்தின் கொடூர தீர்ப்பு


இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்  பஞ்சாயத்தில் மரணத்திற்கு மரணம் தான் தீர்வு என்ற அடிப்படையில் சிங்கண்ணாவை கொலை செய்யலாம் என கொடூர தீர்ப்பை வழங்கப்பட்டது. இதனை மறுத்தால் தாங்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சிய சிங்கண்ணாவின் குடும்பத்தினர் இதற்கு ஒப்புக் கொண்டனர். அதன்படி மே 28 ஆம் தேதி சிங்கண்ணா விஷம் கொடுக்கப்பட்டு அதன்பின் அவர் தூக்கிலிடப்பட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது சடலம் எரியூட்டப்பட்டது. 


 கயா மற்றும் சிங்கண்ணாவின் மரணம் இயற்கையானது போல கிராம மக்கள் வழக்கம்போல பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். ஆனால் இந்த மரணங்கள் குறித்து தகவல் அறிந்த கிராம வருவாய் அலுவலர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் அடுத்த இரண்டு நாட்களில் கொலைக்கு தூண்டியவர்கள், பஞ்சாயத்து மூலம் அதற்கு ஏற்பாடு செய்த தலைவர்கள் என 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.