உத்திரபிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலம் என்பது இந்துக் கோவில்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். இங்குதான் தற்போது பிரமாண்டமான பொருட் செலவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த மாநிலத்தில் தான் இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் காசி உள்ளது. 


குரங்குகள் சண்டை.. இடிந்து விழுந்த பாலம்:


அந்த மாநிலத்தின் பிருந்தாவன் நகரில் பாங்கே பிஹாரி என்ற கோவில் உள்ளது. மிகவும் பழமையான கோவிலான இந்த கோவிலுக்கு அருகில் மிகவும் பாழடைந்த கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று இருக்கிறது. பாங்கே பிஹாரி கோவிலுக்கு வருபவர்கள் கைவிடப்பட்ட அந்த பழமையான கட்டிடத்தைக் கடந்துதான் வரவேண்டும்.


இந்நிலையில், நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொண்டு இருந்த நேரத்தில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் பால்கனியில் குரங்குகள் சண்டையிட்டுக்கொண்டு இருந்துள்ளது. இதனால் மிகவும் பாழடைந்த கட்டிடம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென இடிந்து விழவே இந்த கட்டிடத்தின் கீழ் நடந்து சென்றுகொண்டு இருந்த பக்தர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தது. 


5 பக்தர்கள் உயிரிழப்பு:


திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் பக்தர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கிய பக்தர்களை மீட்டனர். மேலும் இதற்கிடையில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்களும் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக கோயிலுக்கு அருகிலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 


ஏற்கனவே இந்த பகுதியில் குரங்குகள் அதிகமாக உள்ளதாகவும், அது பக்தர்கள், பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் என பலரையும் குரங்குகள் தாக்கியதாகவும் இதுகுறித்து புகார்கள் கொடுக்கப்பட்டும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. முன்பே நடவடிககை எடுக்கப்பட்டிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் பக்தர்கள் கூறிவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக உத்தர பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.