மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது.


ஆர்யன் கானின் வாட்ஸ் அப் சேட்டை ஆராய்ந்த என்சிபி அவர் பாலிவுட் பிரபலம் அனன்யா பாண்டேவுடன் போதைப் பொருள் தொடர்பாக பேசியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் தான் நேற்று அனன்யா பாண்டேவிடன் என்சிபி போலீஸார் மணிக் கணக்கில் விசாரணை நடத்தினர்.


தன்னுடைய நடிப்பு மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்  பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி தன்னுடைய மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி அவருடைய ரசிகர்களுக்கு பெரிய இடியாக அமைந்தது. அத்துடன் அவருடைய தற்கொலைக்கு தற்போது வரை தெளிவான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.


ஆனால் சுஷாந்த் மரணத்துக்குப் பின்னர் தான் பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு பூதாகரமாக வெடித்தது. சுஷாந்த் சிங்கை தொடர்ந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அவரது மேலாளர், எனப் பலரும் இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சில காலம் நீறுபூத்த நெருப்பாகவே பாலிவுட் போதைப் பொருள் விவகாரம் இருந்தது. இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி மும்பையில் ஒரு சொகுசுக் கப்பலில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவருடன் செலிப்ரிட்டி கிட் பலரும் கைதாகினர். தொட்டுத் தொட்டு 17 பேர் கைதாகிவிட்டனர். 


இதுவரை ஜாமீன் கிடைக்காமல், இன்னும் மும்பை ஆர்தர் சாலை சிறையில் தான் ஆர்யன் கான் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தான் விசாரணை வளையத்துக்குள் அனன்யா பாண்டே வந்தார். அவருக்கும், ஆர்யன் கானுக்கும் இடையே நடந்த உரையாடல்களை சாட்சியாக சுட்டிக் காட்டுகிறது என்சிபி. 




ஒரு முறை ஆர்யன் கான் அனன்யா பாண்டேவுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவலில் எனக்கு போதைப் பொருள் ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா என்று வினவியுள்ளார். அதற்கு அனன்யா பாண்டே ஐ வில் ரெய்ஸ் தி மேட்டர் என்று பதிலளித்துள்ளார். இதைக் குறிப்பிட்டே என்சிபி அதிகாரிகள் விசாரணையை அனன்யாவிடம் தொடங்கினார்கள்.
ஆனால் அனன்யா பாண்டேவோ தான் இதுவரை எவ்வித போதை வஸ்துவையும் பயன்படுத்தியதில்லை என்றும் யாருக்காகவும் போதைப் பொருள் வாங்கிக் கொடுத்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.


ஏற்கெனவே, ஆர்யன் கான் வாட்ஸ் அப் சேட்டில் போதைப் பொருளுக்காக கோட் எனப்படும் குறியீட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி சேட் செய்ததையும் என்சிபி அம்பலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.