பாலியல் வன்கொடுமை குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என `அம்மா’ என்று அழைக்கப்படும் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த அமைப்பின் குழு ஒன்று பரிந்துரைத்த பிறகு, `அம்மா’ அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


`அம்மா’ அமைப்பின் துணைத் தலைவர் மணியன்பிள்ளை ராஜு செய்தியாளர்களைச் சந்தித்த போது, `ஒருவர் மீது புகார் இருப்பதன் காரணமாகவே அவரை சங்கத்தை விட்டு நீக்கிவிட முடியாது. அவர் தரப்பு நியாயங்களைக் கேட்க வேண்டும்; அதுகுறித்து பல முறை விசாரிக்க வேண்டும். இந்த அமைப்பின் உறுப்பினரைப் பாதுகாப்பதும் எங்கள் கடமை’ எனக் கூறியுள்ளார். 


மணியன்பிள்ளை ராஜு பேசிய போது, `அம்மா’ அமைப்பின் செயற்குழுவில் இருந்து விலகுவதாக விஜய் பாபு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்த பிறகு, விஜய் பாபு மீண்டும் `அம்மா’ அமைப்பின் செயற்குழுவில் இணைவார் எனவும் கூறியுள்ளார். 



விஜய் பாபு


 


மலையாளத் திரைப்படத்துறையின் நடிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு, விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்க தவறியதால் நடிகை மாலா பார்வதி தன் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் `அம்மா’ அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். 


``அம்மா’ அமைப்பின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அமைப்பின் உள்புகார் கமிட்டி சார்பாக அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் விஜய் பாபுவே செயற்குழுவில் இருந்து விலகியதை, அமைப்பின் மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விஜய் பாபுவின் விலகலை ஏற்பதற்கு முன், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்கிறார் நடிகை மாலா பார்வதி. 



மாலா பார்வதி


 


கடந்த வாரம் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது கொச்சி காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு மேற்கொண்டனர். அதன்பிறகு, விஜய் பாபு தலைமறைவு ஆகியுள்ளார். கடந்த ஏப்ரல் 28 அன்று, விஜய் பாபு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் கூறி அடையாளத்த்தை வெளிப்படுத்தியதால், அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், தேடுதல் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2017ஆம் ஆண்டு, மலையாள நடிகை ஒருவரைக் கடத்தியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது முதலான குற்றங்களின் பின்னணியில் இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பை `அம்மா’ அமைப்பின் உறுப்பினர் பதவியில் நீக்கியது குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம், திலீப்பை மீண்டும் `அம்மா’ அமைப்பில் சேர்த்துக் கொண்டதால அமைப்பின் பெண் உறுப்பினர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.