காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தைப் பார்த்த யாருக்கும் பார்கவை புடிக்காமல் போயிருக்காது. பார்கவ் கங்குலியாக நயன்தாராவின் அன்புச் சகோதரராக வரும் பார்கவ் சுந்தர் பற்றி அவரது தாய் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார்.


அந்தப் பேட்டியில் இருந்து..


பார்கவ் ஒரு டவுன் சிண்ட்ரோம் குழந்தை. தமிழ்நாட்டில் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளுக்கு என வலுவான கூட்டமைப்பு இருக்கிறது. எங்களுக்கு வாட்ஸ் அப் குரூப்பும் உள்ளது. அப்படி ஒரு நாள் அந்த குரூப்பில் நயன்தாராவின் தம்பியாக நடிக்க ஒரு சிறப்புக் குழந்தை வேண்டும். 10ல் இருந்து 12 வயதுக்குள் இருக்க வேண்டும் எனக் கேட்டிருந்தனர். அப்போது நாங்களும் விண்ணப்பித்தோம். முதலில் படக்குழு சார்பில் சிலர் எங்களை சந்தித்தனர். அதன்பின்னர் விக்னேஷ் சிவன் எங்களை சந்தித்தார். அதன்பின்னர் நேரடியாக சமந்தாவே எங்களை சந்தித்தார். பார்கவ் பற்றி நான் எல்லாமே எடுத்துரைத்தேன். அவர்கள் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டனர். ஏதோ வேகத்தில் ஒப்புக்கொண்டோம். ஆனால், எப்படி பார்கவை சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால், நான் பார்கவை புரிந்து கொள்வதைவிட விக்னேஷ் சிவன் நன்றாகப் புரிந்து கொண்டார். முதல் நாளில் இருந்தே அவரிடம் அந்தப் புரிதல் இருந்தது. நானே, விக்னேஷ் சிவனிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். அவர் எப்போதாவது சிறப்புக் குழந்தையை ஹேண்டில் செய்திருந்தாரா என்று. அந்த அளவுக்கு அன்பு காட்டினார்.


அதேபோல் நயன்தாரா மேமுக்கும் பார்கவுக்கும் இருந்த நேசம் அவ்வளவு நெருக்கமானது. அவருடன் எப்படி பார்கவ் அவ்வளவு அழகாக ஐக்கியமானான் என்றா தெரியவில்லை. செட்டில் அவர்கள் இருவரும் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பார்கவுக்காக அவனுடைய ஷாட்களை முதலில் ஷூட் ஆரம்பித்தவுடனேயே முடித்துவிடுவார்கள். பார்கவின் மூட் என்னவென்பதை அறிந்து நடந்து கொள்வார்கள். அவன் எங்கு நிற்கிறானோ அதன்படி அவனுக்காக கேமராமேன் அட்ஜெஸ்ட் செய்து கொள்வார்.


விஜய் சேதுபதியும் பார்கவ் மீது அவ்வளவு பிரியம் காட்டினார். பார்கவுக்காக ஒரு பெரிய சைஸ் பொம்மை கார் மற்றும் கால்பந்து வாங்கிக் கொடுத்தார். அவருடன் நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால், நேரம் கருதி சிலவற்றை கட் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். பார்கவ் பற்றி பேசிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, நீங்கள் எதுவும் யோசிக்காதீர்கள். நானும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை தான் என்றார். 


படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் பார்கவின் என்ட்ரி வந்துவிடும். பார்கவை கிண்டல் செய்யும் நபரிடம், நயன்தாரா அழகாக டவுன் சிண்ட்ரோம் என்றால் என்னவென்று விவரிப்பார். மனிதனுக்கு இயற்கையாக மொத்தம் 23 இணை குரோமோசோம்கள் (46) இருக்கும். இந்த குரோமோசோம்களில் 21-வது இணையில் மூன்று குரோமோசோம்கள் இருந்தால், டவுண் சிண்ட்ரோம் ஏற்படும் (21 ட்ரைசோமி - Trisomy 21). இதை நயன்தாரா  போன்ற லேடி சூப்பர்ஸ்டார் விலக்கிக் கூறியதால் சிறப்புக் குழந்தைகளை கிண்டல் செய்வோரின் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம்.