தூத்துக்குடி கடலோர பகுதி சமீபகாலமாக கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், பீடி இலை, கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தன. இதனால் கடத்தல்காரர்கள் அவ்வப்போது பிடிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடத்தல் அடுத்தக்கட்டத்தை எட்டி இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக போதை பொருட்களும் தொடர்ச்சியாக பிடிக்கப்பட்டு உள்ளன.
அதே போன்று இலங்கையில் இருந்து ஆட்களை படகுகளில் தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதே போன்று இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரன் ஜோனதன் தோர்ன் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார். இது போன்று கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆம்பர்கிரீஸ் என்னும் திமிங்கல உமிழ்நீர் கடத்தலும் சமீபகாலமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சிலர் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரை பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காரில் 3 பேர் வந்தனர். அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, காரில் மெழுகு போன்ற ஒரு பொருளை மறைத்து வைத்து இருந்தனர். அதனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது மெழுகு போன்ற அந்த பொருள், அரிய வகை ஆம்பர்கிரீஸ் என்பது தெரியவந்தது. இந்த ஆம்பர்கிரீஸ் திமிங்கலம் குடலில் சுரக்கக்கூடிய மெழுகு போன்ற திரவம் ஆகும். இந்த ஆம்பர் கிரீஸ் 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இது மெழுகு போன்று இருக்கும். திமிங்கலம் உடலில் இருந்து வெளியேற்றப்படும் ஆம்பர்கிரீஸ் கடலில் மிதக்கும் தன்மை கொண்டது. இந்த ஆம்பர் கிரீஸ் உயர்தரமான நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆம்பர் கிரீஸ் அதிக அளவில் நறுமண பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்து பொருட்களாகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய அரிய வகை ஆம்பர்கிரீஸ் இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து காரில் இருந்த 23 கிலோ எடை கொண்ட ஆம்பர்கிரீசை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.23 கோடி என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஆம்பர் கிரீசை கடத்தி வந்ததாக நெல்லை மேலப்பாளையம் நேதாஜி ரோட்டை சேர்ந்த சதாம் உசேன், தூத்துக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த பெரியசாமி, நெல்லை மாவட்டம் தருவை திடியூர் ரோட்டை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 3 பேரையும் அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விடிய, விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆம்பர்கிரீஸ் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இதற்காக அரிய வகை திமிங்கலத்தை வேட்டையாடி ஆம்பர்கிரீஸ் சேகரித்து உள்ளார்களா, வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த ஜூன் மாதம் திருச்செந்தூர் கடற்கரை பகுதியிலும் கடத்துவதற்காக வைத்து இருந்த 1½ கிலோ ஆம்பர்கிரீசை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் தூத்துக்குடி கடத்தல் கேந்திரமாக மாறி வருவதாக கருதப்படுகிறது. இதனால் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து உள்ளது.