மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பேருந்து நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் புதிதாக அம்பேத்கர் உருவபடம் வைத்து அஞ்சலி செலுத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், எதிர்ப்பை மீறி விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இருதரப்பினரும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுப்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement




மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று சட்ட மேதை அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் புதிதாக அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  




இதனால் ஜாதி மோதல் ஏற்படும் என்று கூறி  மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எதிர்ப்பு காரணமாக முன்னதாக பட்டவர்த்தி  கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 




கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்


அப்போது அவர்கள் மீது மற்றொரு சமூகத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து  இரண்டு தரப்பினரும் கற்களை வீசி மாறி மாறி கற்களால்  தாக்கிக் கொண்டனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்  லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் பட்டவர்த்தியில் மேலும் கலவரம் ஏற்படாதவாறு டாஸ்மாக் கடை மற்றும்  உள்ளுர் கடைகள் அடைக்கப்பட்டன.



இந்தச் சம்பவத்தில் காயமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 5  பேர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பட்டவர்த்தி கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.