Amarjeet Sada: பீகாரைச் சேர்ந்த அமர்ஜீத் சதா 8 வயதில் 3 கொலைகளை செய்ததால், உலகின் இளம் வயது சீரியல் கில்லர் என சாடப்பட்டார்.


குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்கள்:


புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், 18 வயதை கூட பூர்த்தி செய்யாத சிறுவன் ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களாக சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் திமுக பிரமுகர் ஒருவர் சென்னை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவமும் இதற்கு உதாரணமாகும்.  இந்நிலையில், உலகின் இளம் வயது சீரியல் கில்லர் என்று அழைக்கப்படும் அமர்ஜீத் சதா, என்பவர் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.


யார் இந்த அமர்ஜீத் சதா?


எட்டு வயது அமர்ஜீத் சதா 2007 ஆம் ஆண்டு ஒரு கைக்குழந்தையைக் கொன்றது தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, அவனது முகம் முழுவதுமே சிரிப்பு மட்டுமே நிறைந்து இருந்தது. உலகின் இளம் வயது சீரியல் கில்லர் என்று அழைக்கப்படும் சதா, மூன்று கொலைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அவற்றில் இரண்டு கொலைகள் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 1998 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள முசஹஹர் கிராமத்தில் பிறந்த இவன் 2006ம் ஆண்டு சாதாரண எட்டு வயது நிரம்பிய சிறுவனாக இல்லை. காரணம் அந்த வயதிலேயே 6 வயது சிறுவன் ஒருவனை அமர்ஜீத் கொலை செய்தது தரவுகள் தெரிவிக்கின்றன.


மருத்துவர்கள் சொல்வது என்ன?


சிறுவனை பரிசோதித்த  உளவியலாளர், “காயங்களை ஏற்படுத்துவதில் இருந்து மகிழ்ச்சியைப் பெறும் சாடிஸ்ட் தான் அமர்ஜித்” என்று குறிப்பிட்டுள்ளார். பாகல்பூர் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி,  அமர்ஜீத்தை விசாரிக்கும் போது ​கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன் முதலில் தனக்கு பிஸ்கட் கேட்டார் என்று கூறப்படுகிறது. அமர்ஜீத்தின் அலட்சியம் அதிகாரியை ஆத்திரப்படுத்தினாலும், எதிரே அமர்ந்திருந்தவர் வெறும் எட்டு வயது சிறுவன் என்பதை அவரால் மறக்க முடியவில்லை என்று அப்போது நாளேடுகளில் வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 


அமர்ஜீத்தின் முதல் கொலை:


அமர்ஜித் பீகாரில் கூலி வேலை செய்யும் ஏழை தம்பதியருக்கு பிறந்தார். இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையும் பிறந்ததால், அந்த குடும்பம் போதிய வருமானமின்றி சிரமப்பட்டுள்ளது. இயல்பிலேயே தனிமையை விரும்பும் அமர்ஜீத்துக்கு நண்பர்கள் இல்லை. மரங்களில் ஏறுவது, கிராமங்களில் சுற்றி திரிந்து பொழுதை கழித்துள்ளார். இந்நிலையில் தான் அமர்ஜீத்தின் வீட்டிற்கு அவரது அத்தை, தனது 6 வயது மகளுடன் வருகை தந்துள்ளார். இந்த நிகழ்வு தான் அவரது வாழ்வில் யாரும் எதிர்பாராத பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


சில நாட்கள் கழித்து அமர்ஜீத்தின் அத்தையும் அம்மாவும் காய்கறி வாங்க சந்தைக்கு சென்றிருந்தனர். அப்போது அமர்ஜீத் தனது உறவினர் சிறுமியை கிள்ளவும் அறையவும் ஆரம்பித்தான். அவள் அழத் தொடங்கியதும், கழுத்தை கைகளால் பிடித்து நெரித்து கொலை செய்துள்ளார். அதோடு, அந்த சிறுமியின் உடலை அருகிலிருந்த காட்டிற்கு கொண்டு சென்று, தலையின் மீது கல்லைப் போட்டு சிதைத்து உடலை புதைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்த குற்றத்தை அமர்ஜீத் ஒப்புக்கொண்ட பிறகும் அவரது பெற்றோர் அவரைக் காப்பாற்றினர். காவல்நிலையத்தில் புகார் தராமல் மறைத்துள்ளனர்.  இதன் விளைவாகவே அவர் இரண்டாவது கொலையையும் செய்துள்ளார்.


அமர்ஜீத்தின் இரண்டாவது கொலை:


அதன்படி, ஒருநாள் வீட்டு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த தனது தங்கையை, கழுத்தை பிடித்து தூக்கி நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது தாயார் சிறுமிக்கு பாலூட்ட முயன்றபோது தான், அவள் இறந்துவிட்டதை உணர்ந்துள்ளார்.  அமர்ஜீத்திடம் நீ தான் கொலை செய்தாயா என்று கேட்டதற்கு, அவன் 'ஆம்' என பதிலளித்து இருக்கிறார். ஏன் என்று கேட்ட போது? ”சும்மா” என கூறி அதிர்ச்சியூட்டியுள்ளான். ஆனால், இந்த முறையும் அமர்ஜீத்தின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்காமல் சம்பவத்தை மறைத்துள்ளனர்.


அமர்ஜீத்தின் மூன்றாவது கொலை:


2007ம் ஆண்டு அமர்ஜித் செய்த கடைசி கொலையின் போது தான் காவல்துறையிடம் சிக்கினான். இந்த முறை குஷ்பு என்ற ஆறு மாத பெண் குழந்தையை அவன் கொலை செய்தான். குழந்தையின் தாய் தனது மகளை ஆரம்பப் பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வந்தபோது மகளை காணவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமர்ஜித் அவளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். கழுத்தை நெரித்து செங்கலால் தாக்கி பின்னர் உடலை புதைத்ததை ஒப்புக்கொண்டார். அதோடு உடலை புதைத்த இடத்திற்கும் கிராம மக்களை அழைத்துச் சென்றுள்ளார். போலீசார் விசாரணை நடத்தியபோது, "அவள் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தாள், நான் அவளை சிறிது தூரம் எடுத்துச் சென்று கல்லால் அடித்து கொன்று புதைத்தேன்," என்று தெரிவித்துள்ளார்.


அமர்ஜீத் கைதும், விடுவிப்பும்:


இறுதியாக காவல்துறையினர் அமர்ஜீத்தை பிடித்துச் சென்றபோது, தான் செய்த காரியத்திற்காக  முகத்தில் எந்த பயமும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது செயல்பாடுகள் போலீஸ் அதிகாரிகளை திகைக்க வைத்தது. தொடர் விசாரணைக்குப் பிறகு அந்த சிறுவன தனது 3 கொலைகள் தொடர்பாகவும் உண்மையை தெரிவித்துள்ளான். கொலை செய்த போது அவர் மைனர் என்பதால், அமர்ஜீத் சிறுவர் சிர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு சிகிசையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2016ம் ஆண்டு 18 வயதை எட்டியபோது, அமர்ஜீத் ஒரு புதிய அடையாளத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி யாருக்கும் தெரியாது.