Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர்.


ஆஃப்கானிஸ்தான் சாலை விபத்து:


காபூல்-காந்தகார் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமானதாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபூல்-காந்தஹார் நெடுஞ்சாலையில், கஸ்னி நகருக்கு அருகில் உள்ள நானி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கஜினி நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பான விரிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் மற்ற ஆப்கானிய சாலைகளில் ஏற்படும் அடுத்தடுத்த சாலை விபத்துகளில் மேலும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்தகைய விபத்துகளால் உயிரிழப்புகள் மற்றும் பலர் காயமடைவது என்பது தொடர்கதையாகி வருகிறது.


சாலை விதிகளில் அலட்சியம்:


ஆப்கானிஸ்தானில் உள்ள பல சாலைகள் விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சாலைகளாக உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும், அந்நாட்டைச் சேர்ந்த ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டுகின்றனர். சீரற்ற நிலையில் உள்ள சாலைகளும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதும் இந்த விபத்துகளுக்கு காரணமாக உள்ளன. இதனால், ஆப்கானிஸ்தானின் நெடுஞ்சாலைகளில் அதிக உயிரிழப்புகளைத் தடுக்க போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதிலும் சாலைப் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவதிலும் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பொறுப்புடன் வாகனம் ஓட்டும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் பாதுகாப்பான சாலை நிலைமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கும், அரசாங்கமும் பொது மக்களும் சேர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.