ஏர் இந்தியா நிறுவன பெண் விமானி ஸ்ருஷ்டி துளி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் காதலர் ஆதித்ய பண்டிட் கைது செய்யப்பட்டுள்ளார். 


அசைவ உணவுப் பழக்கத்தை கைவிடுமாறு மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


அந்தேரியின் மரோல் பகுதியில் உள்ள கனகியா மழைக்காடு கட்டிடத்தில் உள்ள அவரது வாடகை குடியிருப்பில் திங்களன்று சிருஷ்டி துலி என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அன்றைய தினம் அவர் டேட்டா கேபிளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. 


இந்நிலையில்தான் அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காதலன் ஆதித்யா பண்டிட் (27) கைது செய்யப்பட்டுள்ளார். 


பொவாய் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “துலியின் உறவினர் கொடுத்த புகாரில், பண்டிட் துலியை பொது இடங்களில் அடிக்கடி துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் துலியின் உணவுப் பழக்கத்தை மாற்றவும், அசைவ உணவை உட்கொள்வதை நிறுத்தவும் பண்டிட் அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 


மேலும் அவர் கூறுகையில், “திங்கள் கிழமை துலி பண்டிட்டுக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் துலி தங்கியிருந்த பிளாட்டுக்கு வந்துள்ளார். கதவு பூட்டியிருந்ததை கண்டு அங்கிருந்த செக்யூரிட்டியிடம் மாற்று சாவி வாங்கி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது துலி டேட்டா கேபிளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. 


அதிர்ச்சியடைந்த பண்டிட் அவரை மீட்டு அந்தேரியில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” எனக் கூறினார். 


துலி உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மும்பையில் வசித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பைலட் படிப்பைத் தொடரும் போது இருவரும் சந்தித்து காதலித்தது தெரியவந்துள்ளது. 


இந்நிலையில்தான் பண்டிட் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நவம்பர் 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.