குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் உள்ளது இசான்புர். அந்த பகுதியில் வசித்து வருபவர் வருண் பாண்ட்யா. இவரது வீடு கடந்த இரு தினங்களாக பூட்டப்பட்ட நிலையிலே இருந்துள்ளது. மேலும், வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றமும் வீசிக்கொண்டு இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று இரவு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காத காரணத்தால், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே படுகாயங்களுடன் வருண் தரையில் வீழ்ந்து கிடந்துள்ளார். மேலும், அவருக்கு அருகே இரண்டு உடல்கள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், படுகாயங்களுடன் தரையில் விழுந்து கிடந்த வருணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், அழுகிய நிலையில் இறந்து கிடந்த உடல்கள் யாரென்று விசாரித்ததில் ஒருவர் வருண்பாண்ட்யாவின் தாயார் வந்தனா பாண்ட்யா என்றும், மற்றொருவர் வருணின் உறவினர் அமுல் பாண்ட்யா என்றும் தெரியவந்துள்ளது. பின்னர், அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், வருண்பாண்ட்யா கடந்த 15 நாட்களில் மட்டும் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததும், அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றியதும் தெரியவந்தது. புதன்கிழமை இரவு போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் ஒருவர் அளித்த தகவலில்கூட, வருண்பாண்ட்யா மீண்டும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தாலும் செய்வார், அதனால்தான் வீடு பூட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது வருணின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இடம்பெற்றிருந்தது. இதனால், அவர் மீண்டும் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், உயிரிழந்த அவரது தாயார் வந்தனா பாண்ட்யாவையும், அவர்களது உறவினர் அமுல் பாண்ட்யாவையும் வருண்தான் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் 39 வயதான வருணிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.