முன்னாள் கடலூர் நகராட்சித் தலைவராகவும் அதிமுகவின் கடலூர் நகர செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் ஆர்.குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆலப்பாக்கம் எஸ்.வீரமணி ஆகியோர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். 

 


 

நகர செயலாளர் ஆர்.குமரனின் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு கூடி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு காரணமாக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் இருப்பதாக குற்றஞ்சாட்டி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும் தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பனும் களம் கண்டனர். சட்டமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டு காலமாக கடலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்த எம்.சி.சம்பத்தை தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பன் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவை சேர்ந்தவர் கடலூரில் சட்டமன்ற உறுப்பினரானார்.

 


 

 

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., முன்னாள் தொழில் துறை அமைச்சர் சம்பத் அவர்களின் தோல்விக்கு, கடலுார் நகர துணைச் செயலர் கந்தன் என்பவர்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று, சத்தியம் செய்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று கந்தன் வீடியோ வெளியிட்டிருந்தார், அதில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.சி.சம்பத்தின் வெற்றிக்கு எதிராக உட்கட்சியை சேர்ந்த சிலரே உள்ளடி வேலை செய்ததாகவும், அவர்களை அய்யனார் கட்டாயம் பழிவாங்குவார் என்றும் என்றைக்கும் எம்.சி.சம்பத்தின் விஸ்வாசியாகவே இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் கந்தன் வீடியோவில் கூறியது போல் உள்ளடி வேலை பார்த்தவர்களை அய்யனார் தான் பழிவாங்கிவிட்டாரா என்ற கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. 

 

இந்த நிலையில் நீக்கப்பட்டவர்களின் தரப்பில் கேட்டபோது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அதிமுக தலைமைக்கு கொடுத்த தவறான தகவலின் அடிப்படையிலேயே மூன்று பேரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.