திருவாரூர் அருகே புதுப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் இந்த குளத்தில் அந்த கிராம மக்கள் மீன் பிடித்து விற்பனை செய்து அதில் வரும் பணத்தினை கிராமத்தின் பொதுவான செலவிற்கு பயன்படுத்துவதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன் குளத்தினை தனது ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டதாகவும், வேறு யாரும் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி கிடையாது எனவும் தெரிவித்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று புதுப்பத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வீரையன் என்பவர் குளத்தில் இறங்கி மீன்பிடித்துள்ளார். அப்பொழுது அந்தப் பகுதிக்கு வந்த அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன் யாரைக்கேட்டு குளத்தில் மீன்பிடிக்கிறாய், இந்த குளம் என்னுடையது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது நடராஜன் தனது முதுகில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வாக்குவாதம் செய்த வீரையனின் கையில் வெட்டியிருக்கிறார். இந்த சம்பவத்தை அருகிலிருந்து பார்த்தவர்கள் உடனடியாக வீரையனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் வீரையனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அப்பொழுது வெட்டுப்பட்ட வீரையனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடராஜன் வீட்டிற்குச் சென்று கற்கள் மற்றும் கட்டைகளால் வீடு மற்றும் வாகனங்களை தாக்கியுள்ளனர். அப்பொழுது வீட்டினுள்ளே இருந்த நடராஜனின் மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக காவல்துறையினர் பொதுமக்களை தடுக்கும்பொழுது காவல்துறையினருக்கும் கல்லடிபட்டு காயமடைகின்றனர். பின்னர் அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பொதுமக்களை நடராஜன் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்கிறார். அப்பொழுது நடந்த சம்பவத்தை கிராம மக்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜனை காவல்துறையினர் கைது செய்கின்றனர். நடராஜன் மீது கொலைமுயற்சி, தகாத வார்த்தைகளால் பேசுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுப்பத்தூர் கிராமத்தில் மீண்டும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடராஜனின் ஆதரவாளர்கள் நடராஜனின் வீடு மற்றும் வாகனங்கள் அவர்களின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காவல்துறையினருக்கு நடராஜரின் உறவினர்கள் வைத்துள்ளனர். கிராமத்தில் மீன்பிடித்தலில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் கிராமத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.