சேலம் மாநகர் மாமாங்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் கடந்த எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் சிறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி கூட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்திய அமைப்பின் தேசிய தலைவராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமனும், தேசிய செயலாளராக பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ், தமிழ்நாடு சேர்மனாக நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முத்துராமன் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், இவர் மோசடி வேளையில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் வந்ததையடுத்து சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.



அப்போது சேலம் ஜாகிர் அம்மாபாளையம் இரண்டாவது சன்னதி தெருவை சேர்ந்த பைனான்சியர் கோபால் சாமி என்பவர், எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சிலில் தமிழ்நாடு சேர்மன் பதவிக்கு தான் 50 லட்சம் கொடுத்ததாகவும், பின்னர் அந்தப் பதவியை நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டதாகவும், இதனால் தான் கொடுத்த ₹50 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டபோது ₹9 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ₹41 லட்சத்தை தராமல் ஏமாற்றி வரும் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சூரமங்கலம் காவல்துறையினர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமனும், தேசிய செயலாளராக பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 



மேலும் இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடிகை நமீதாவின் கணவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் சிறு தொழில் அமைப்பின் தமிழ்நாடு சேர்மன் பதவியை பெற நடிகை நமீதாவின் கணவர் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து போனது உண்மைதானா எனவும், இந்த பதவி மத்திய அரசு பதவி என நினைத்து ஏமாந்து போனாரா எனவும் சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.