பட்டியலின மக்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் சென்னை கொண்டு வரப்பட்டார்.
பட்டியல் வகுப்பினர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் நேற்று கைது செய்யப்பட்டார். மீரா மிதுன் பேசியது தொடர்பாக, சென்னையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான வன்னிஅரசு புகார் அளித்தார்.இந்தப் புகாரை அடுத்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது IPC சட்டப்பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவைகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால், மீரா மிதுனை சென்னை அழைத்து வர தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர் வாக்குமூலம் கொடுக்காமல் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து அடம்பிடித்து வருகிறார். அவர் இன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதனிடையே, மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. மீரா மிதுனின் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக மீரா மிதுனின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
மீரா மிதுன் அந்த வீடியோவில், "எல்லாரும் என்ன டார்ச்சர் பண்றாங்க. முதலமைச்சர் அவர்களே, ஒரு பொண்ணுக்கு இப்படிதான் நடக்குனுமா? ஒரு கஷ்டப்படுற பொண்ணுக்கு இப்படிதான் நடக்கனுமா? எல்லாரையும் வெளிய போக சொல்லுங்க... போலிஸ்னா அட்ராசிட்டி பண்ணுவிங்களா... என் போன தர முடியாது. நான் இங்கயே செத்துருவேன். என்மேல ஒரு கை பட்டாலும், நான் இங்கயே செத்துருவேன்" என்று அழுது புலம்புகிறார்.
கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை, இந்த வீடியோ பதிவு செய்த பிறகு தான் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சர்ச்சை பேச்சு: மீரா மிதுன்.. சர்ச்சைகளின் நாயகி. இவர் வாயைத் திறந்தாலே பிரச்சினை தான். தனது நண்பர்கள் தொடங்கி அஜித், விஜய், சூர்யா என அல்டிமேட் ஸ்டார் வரை அவர் பஞ்சாயத்துக்கு இழுக்காத ஆளே இல்லை என்று கூறலாம். வாயை விடுவது பின்னர் வாங்கிக் கட்டுவது என்பது மீரா மிதுனுக்கு நியூ நார்மல்.
இதுவரை அவர் பேசியது எல்லாமே தனிநபர் தாக்குதல் என்றிருந்தன. ஆனால், இப்போது அவர் பேசியிருப்பது சமூகச் சர்ச்சை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்புப் பேச்சை நெருப்பாய் உமிழ்ந்திருக்கிறார் மீரா மிதுன். இதனால், அவர் மீது சட்ட நடவடிக்கை பாய அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்படி என்னதான் பேசினார் மீரா? "பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது. திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை" இது தான் மீராவின் பேச்சு.