இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டு விழாவை நாம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 200 ஆண்டுகால காலனி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள் இது. இந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தர தங்களின் இன்னுயிரை துச்சமென மதித்த தியாகிகள் ஏராளம். விடுதலைக்காக நடந்த போராட்டங்களும் எண்ணிலடங்காதவை. அவற்றில் சில குறிப்பிடத்தக்க போராட்டங்களைப் பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.


1857 சிப்பாய் கலகம்:


இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக இருப்பது மங்கல் பாண்டே வித்திட்ட சிப்பாய் கலகம். இதுதான் வரலாற்றில் அறியப்பட்ட முதல் விடுதலைப் போராட்டம். அந்நி ஆதிக்கத்தை எதிர்த்து உயர்த்தப்பட்ட முதல் குரல் இதுதான். இந்தக் குரலுக்கு அடுத்தடுத்து வலு சேர இந்தியா சுதந்திரம் பெற்றது. கிழக்கிந்திய கம்பெனி 1858ல் ஒரு சட்டத்தை அமல்படுத்தியது. ஆங்கிலேயரின் அந்தத் துணை படை திட்டம் மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது. அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.


லக்னோ உடன்படிக்கை


டிசம்பர் 1919ல் இந்திய தேசிய காங்கிரஸுக்கும் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் லக்னோவில் கையெழுத்தானது. ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவிக்கும் ஒப்பந்தம் அது. 1920ல் செயல்பாட்டுக்கு வந்த இந்த இயக்கம் விடுதலைப் போரின் ஒரு மைல் கல். இதனை மகாத்மா காந்தி ஏற்று வழிநடத்தினார். இந்த இயக்கமானது வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்குவதை ஊக்குவித்தது.


ஒத்துழையாமை இயக்கம்:


1920 டிசம்பர் மாதம் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குகிறார் காந்தி. ஒத்துழையாமை இயக்கம் அகிம்சை வழியில் நடைபெறும் என்றும், ஆங்கிலேய அரசின் கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், ஏனைய அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட வேண்டும் என்றும், விவசாயிகள் வரி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காந்தி கூறினார். காந்தியின் அழைப்புக்கு ஒட்டுமொத்த இந்தியாவே செவிகொடுத்தது. 1920-ன் இறுதியில் ஆரம்பித்து 1921-ம் ஆண்டு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. 


கீழ்ப்படியாமை இயக்கம்:


டிசம்ப் 1929ல் வரலாற்று முக்கியத்துவம் காங்கிரஸ் கூட்டத்தில் கீழ்ப்படியாமை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தலைமையில் இந்த இயக்கம் செயல்பட்டது. ஜவஹர்லால் நேருவும் இந்தப் போராட்டத்தில் இருந்தார். பிரிட்டிஷாரிடமிருந்து முழு சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்த தீர்மானத்தை இந்திய தேசிய காங்கிரஸ் நிறைவேற்றியது. ஜனவரி 26, 1930 ஐ சுதந்திர தினமாகக் கொண்டாடியது. தொழிலாளர் ஆணையம் நாடு முழுவதில் கீழ்படியாமை இயக்கத்தை தொடங்குவதற்கு அது அங்கீகாரமளித்தது. இந்தப் போராட்டம் வலுப் பெறவே பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள் காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்தனர்.


வெள்ளையனே வெளியேறு:


1942 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வார்தாவில் கூடிய காங்கிரஸின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடக்கியது. அதையடுத்து ஆகஸ்ட் 8 ஆம் நாள் மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி 'செய் அல்லது செத்து மடி' என்று முழங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அது இந்திய விடுதலைப் போருக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. ஐந்தே ஆண்டுகளில் ஆகஸ்ட் 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் உறுதியானது.


அன்றைய சமூகத்தை சிறைவாசத்துக்கும், தியாகத்துக்கும், ஆட்சியாளர்களை எதிர்த்துக் கோஷமிடுவதற்கும் இத்தகைய விடுதலை இயக்கங்களே பழக்கப்படுத்தின. நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நன்னாளில் இந்த வரலாற்றையும் நினைவு கூர்தல் நலம்.